Published : 12 Dec 2023 07:19 PM
Last Updated : 12 Dec 2023 07:19 PM
புதுடெல்லி: நாட்டில் விளையும் கொப்பரைகளை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் ‘பாரத் கோகனட் ஆயில்’ என மாற்றி விற்பனை செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக, டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை (டிசம்பர் 13) முதல் தென்னிந்திய தென்னை விவசாயிகள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொப்பரை தேங்காய்களை கிலோ ரூ.108.60-க்கு விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து வைத்துள்ளது. நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரைகளை வெளிச் சந்தையில் விற்பனைக்கு மிகத் தீவிரம் காட்டுகிறது. இதை பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்கள் கூட்டணி அமைத்து கிலோ ரூ.65 க்கு ஏலம் எடுப்பதற்காக முயற்சிக்கிறார்கள். மொத்த கொப்பரை தேங்காய் உற்பத்தியில் 10 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.
மீதமுள்ள 90 சதவிகிதக் கொப்பரை தேங்காய்கள் வெளிச்சந்தையில்தான் விற்பனையாகிறது. வெளிச்சந்தையில் தற்போது ரூ.85 க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் கொப்பரை தேங்காய் விலை ரூ.60 க்கு குறைவான விலைக்கு வந்து விடும். தேங்காய் விலை ரூ.5-க்கு வந்து விடும். இதனால், கடுமையான பாதிப்பு தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட உள்ளது. தற்போது மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்துள்ள கோதுமைகளை ’பாரத் ஆட்டா’ என்கிற பெயரில் விற்பனை செய்கிறது.
இதை சப்பாத்தி மாவாக தயாரித்து கிலோ ரூ. 27-க்கும், ‘பாரத் தால்’ எனப் பருப்பு வகைகளை கிலோ ரூ.60க்கும், பாரத் ஆனியன் என்கிற பெயரில் ரூ.25க்கு வெங்காயத்தையும் விற்பனை செய்கிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நாபெட் நிறுவனம் தன்னிடம் உள்ள கொப்பரை தேங்காய்களை எண்ணெயாக மாற்றி விற்பனை செய்யலாம்.
இதைவிடுத்து வெறும் கொப்பரையாக விற்பனை செய்வது தென்னை விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. எனவே, மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்துள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களை ‘பாரத் கோகனட் ஆயில்’ (Bharath Coconut oil) என்கிற பெயரில் தேங்காய் எண்ணெயாக மாற்ற வேண்டும். இதேபோல், இனிவரும் காலத்தில் கொள்முதல் செய்ய உள்ள கொப்பரை தேங்காய்களையும் பாரத் கோகனட் ஆயிலாக்க வேண்டும். இவற்றை, மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவங்க உள்ளது. இதில் அனைத்து இந்திய விவசாய சங்க தலைவர்களும், அனைத்து விவசாயிகளும், தென்னை விவசாயிகளும் திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் 8-ல் உத்தரகண்டின் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர், உத்தரகண்டில் விளையும் பொருட்களை, ‘ஹவுஸ் ஆப் இமாலயாஸ்’ எனும் பெயரில் அரசு சார்பில் உணவுப் பொருட்களையும் அறிமுகப்படுத்தினார். உத்தரகண்டில் விளையும் விவசாயப் பயிர்களை அரசே கொள்முதல் செய்து, உணவுப்பொருளாக்கும் திட்டம் இது, இதற்காக, உத்தராகண்ட் அரசை பிரதமர் மோடி பாராட்டிப் பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறும்போது, “இந்த உணவுப் பயிர்களின் விற்பனையால் எனது ஒரு விருப்பம் பூர்த்தியடையும். இந்த தானியங்கள் விளைவிக்கும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 கோடி சேர வேண்டும் என நாம் சங்கல்பம் எடுத்துள்ளோம். இவ்வாறு நம் நாட்டின் மாநிலங்கள் செய்வதன் மூலம், வெளிநாடுகளை நம்பியிருத்தல் குறையும். நம் நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்.
இதற்காக, நாம் நமது உள்ளூர் உற்பத்தி பொருட்களை ஊக்குவித்து, அவற்றை முத்திரை பொருட்களாக மாற்றுவது அவசியம்” எனத் தெரிவித்திருந்தார்.உத்தரகண்ட் அரசு செய்வதைத்தான் இந்த தேங்காய் வியாபாரிகள் கோரி வருகின்றனர். கொப்பரைக் கொள்முதலில் அரசிற்கு ஏற்படும் இழப்பு தனியாருக்கு செல்லாமல் அதை பொதுமக்களிடம் சேர விரும்புகின்றனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரான ஈசன் முருகசாமி கூறும்போது, “இந்திய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து இப்போராட்டம் செய்ய உள்ளனர். இந்தியாவில் விளையும் கொப்பரைகளின் கொள்முதல் வருடம் ஒன்றுக்கு 2 முதல் 2.5 மெட்ரிக் டன் வரை உள்ளது. இவற்றில், மிக அதிகமாக சுமார் ஒரு மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான அளவில் தமிழகத்தில் பயிராகிறது.
தற்போது நபேட்டிலிருந்து கொப்பரையை தனியார் கொள்முதல் செய்து எண்ணெய்யாக்கி விற்று லாபம் அடைகின்றனர். கொள்முதல் செய்யப்பட்டக் கொப்பரைகளை மத்திய அரசே எண்ணெயாக்கி விற்பனை செய்வதன் மூலம், அரசிற்கு ஏற்படும் இழப்பு பொதுமக்களுக்கு கிடைக்கும். இப்பிரச்சனையை தமிழக அரசின் முன்பும் போராட்டம் நடத்தி இப்போது மத்திய அரசிடம் கோர டெல்லி வந்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT