Published : 12 Dec 2023 06:47 PM
Last Updated : 12 Dec 2023 06:47 PM
லக்னோ: செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவை நமது செயல்திறன் மற்றும் வேலைத் திறனை பெரிய அளவில் மேம்படுத்த வாய்ப்புகளை வழங்குவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐஐடி) 2-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ''இந்தியாவில் இன்று தேவை, மக்கள்தொகை, ஜனநாயகம், விருப்பம், கனவு ஆகிய 5 அம்சங்கள் உள்ளன. இவை நமது வளர்ச்சிப் பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த நமது நாட்டின் பொருளாதாரம், இன்று 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. 2030-ம் ஆண்டில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது.
இந்தியா ஒரு முற்போக்கான, ஜனநாயக நாடு. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நமது கனவு. ஐ.ஐ.ஐ.டி லக்னோவின் அனைத்து மாணவர்களும் இந்தத் தொலைநோக்குப் பார்வையில் ஒரு பங்கேற்பாளராக மாறுவது மட்டுமல்லாமல், அதை நிறைவேற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
மாற்றம் என்பது இயற்கையின் நியதி. 4-வது தொழிற்புரட்சியின் தொடக்கத்தை நாம் காண்கிறோம். செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் ஒரு முக்கியமான கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பரந்த பயன்பாடுகளுடன், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஏறத்தாழ நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இடம்பெற்றுள்ளது. சுகாதாரம், கல்வி, வேளாண்மை, பொலிவுறு நகரங்கள், உள்கட்டமைப்பு, பொலிவுறு இயக்கம், போக்குவரத்து போன்ற அனைத்துத் துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவை நமது செயல்திறன் மற்றும் வேலைத் திறனைப் பெரிய அளவில் மேம்படுத்த பல வாய்ப்புகளை வழங்குகிறது'' என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT