Published : 12 Dec 2023 04:07 PM
Last Updated : 12 Dec 2023 04:07 PM
புதுடெல்லி: நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழகத்துக்கான ஊதிய நிலுவை தொகை ரூ.261 கோடி, உபகரண நிலுவை ரூ.106 கோடி எனத் தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. எழுப்பிய கேள்வி: “நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்(100 நாள் வேலைத் திட்டம்) பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை மற்றும் இத்திட்டத்துக்கான உபகரணங்களுக்கான நிலுவைத் தொகை ஒவ்வொரு மாநில வாரியாக விவரம் தேவை.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு உள்ளது? இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2023 அக்டோபர் மாத நிலவரப்படி முழுமையாக செலவிடப்பட்டுவிட்டதா? அடுத்தடுத்த நிதி ஒதுக்கிடுகள் உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகை வைக்கப்படும்போது அதுபற்றி அவர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படுகிறதா?” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்துள்ள பதிலில், “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது அந்தந்த பகுதிகளில் தேவைக்கேற்ப செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும். இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது தொடர் நடவடிக்கை. இத்திட்டத்துக்காக ஒன்றிய அரசு ஊதிய நிதியையும், உபகரணங்களுக்கான நிதியையும், நிர்வாக நிதியையும் மாநில அரசுகளுக்கு ஒதுக்குகிறது. மாநில அரசுகள் மூலமாக மாவட்ட நிர்வாகங்களுக்கு நிதி செல்கிறது.
மாவட்டங்களுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. 2023 அக்டோபர் மாதப்படி ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை. நவம்பர் 29, 2023 வரையிலான இத்திட்டத்துக்கான நிலுவையில் இருக்கும் நிதி பற்றிய மாநில வாரியான விவரங்கள் அரசிடம் உள்ளன. அதன்படி தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்துக்கான ஊதிய நிலுவைத் தொகை 261 கோடியே 85 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கான உபகரண நிலுவைத் தொகை (material funds) 106 கோடியே 22 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயனாளிகள் பணியாற்றிய 15 நாட்களுக்குள் ஊதியம் பெற தகுதி பெற்றவர்கள். இத்திட்டத்தில் பணியாற்றுபவர் தனக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் இதற்கென வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டு அறிக்கை மூலமாக அறியலாம். மேலும், இத்திட்டத்தின் பயனாளிகள் தங்களது ஸ்மார்ட் போனில் Janmanrega App என்ற செயலியை பதிவிறக்கி அதில் தங்களது வேலை எண்ணைப் பதிவு செய்து தங்களுக்கான ஊதிய நிலுவைத் தொகை விவரங்களை அறிய முடியும்” என்று மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT