Published : 12 Dec 2023 03:37 PM
Last Updated : 12 Dec 2023 03:37 PM

“நேருவுக்கு மட்டுமல்ல... படேல், ஷியாம பிரசாத் முகர்ஜிக்கும் பங்கு உண்டு” - ஃபரூக் அப்துல்லா @ காஷ்மீர் விவகாரம்

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா

புதுடெல்லி: “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் முடிவு எடுக்கப்பட்டதில் ஜவஹர்லால் நேருவுக்கு மட்டுமல்ல, வல்லபாய் படேல் மற்றும் ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது” என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பல பத்தாண்டுகளாக வன்முறை நிலவியதற்கு நாட்டின் முதல் பிரதமர் நேருவே காரணம் என பாஜக விமர்சித்து வரும் நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டதில் பாஜகவின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான ஷியாம பிரசாத் முகர்ஜிக்கும் பங்கு இருக்கிறது. நேரு மீது பாஜக ஏன் இப்படி விஷத்தைக் கக்குகிறது என எனக்குத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்டதற்கு நேரு மட்டுமே பொறுப்பு அல்ல.

பிரிவு 370 குறித்த மசோதா கொண்டு வரப்பட்டபோது நாடாளுமன்றத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இருந்தார். நேரு அப்போது அமெரிக்காவில் இருந்தார். இந்த மசோதா தொடர்பாக நடைபெற்ற கேபினெட் கூட்டத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில்தான் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது'' என தெரிவித்தார்.

மேலும், ''ஜம்மு காஷ்மீரில் உடனடியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என நம்பினேன். ஆனால், அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்திருக்கிறது. இதில் எங்கே நீதி இருக்கிறது?'' என அப்துல்லா குறிப்பிட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் திரும்ப எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்திய அரசு கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஃபரூக் அப்துல்லா, ''எடுத்துக்கொள்ளட்டும். அவர்களை யார் தடுத்தது? அரசு ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இதில் முடிவு எடுக்க நாங்கள் யார்?'' என்றும் அவர் தெரிவித்தார்.

அமித் ஷா பேசியது என்ன? - நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறிப்பிட்ட ஒரு நபரால் (நேரு) தாமதமானது. நாடு சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீரில் திடீரென சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது.

370-வது சட்டப்பிரிவால் குறிப்பிட்ட 3 குடும்பங்கள் மட்டுமே பலன் அடைந்து வந்தன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்துவிட்டன. கல்வீச்சில் ஈடுபட்டவர்களின் கையில் நாங்கள் லேப்டாப்களை வழங்கி வருகிறோம். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி, அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று அமித் ஷா பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x