Published : 12 Dec 2023 10:08 AM
Last Updated : 12 Dec 2023 10:08 AM
திருவனந்தபுரம்: தன் மீது தாக்குதல் நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னதாக கேரள ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்எஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் முகமது ஆரிஃப் கான், தன் வாகனத்தை தாக்கி தன் மீது தாக்குதல் நடத்த பினராயி விஜயன் சதி செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
”எனது காரை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கருப்புக் கொடி காட்டியதோடு வாகனத்தையும் தாக்கினர். முதல்வர் நிகழ்ச்சியில் இதுபோன்று போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? முதல்வரின் கார் அருகே யாரேனும் வர இயலுமா? அதற்கு காவல்துறை அனுமதிக்குமா? ஆனால் எனது கார் சென்ற வழியில் போராட்டக்காரர்கள் இருந்தனர். கருப்புக் கொடி காட்டினர். முற்றுகையிட்டனர். காரை தாக்கினர். போலீஸார் உடனே அவசர அவசரமாக அவர்களை அங்கிருந்த கார்களுக்குள் தள்ளினார்கள். அவ்வளவுதான் அவர்கள் அங்கிருந்து கார்களில் பறந்துவிட்டனர். அதனால்தான் சொல்கிறேன் இது நிச்சயமாக பினராயி விஜயனின் சதி என்று. அவர்தான் என்னைத் தாக்க ஆட்களை அனுப்பியுள்ளார். திருவனந்தபுர சாலைகளை குண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர்” என்று கேரள ஆளுநர் ஆரிஃப் கான் ஆவேசமாகக் கூறினார்.
ஏற்கெனவே கேரள முதல்வர் - ஆளுநர் மோதல் சர்ச்சையாக இருக்கிறது. இணக்கமான போக்கு இல்லாததாலேயே ஆவணங்களை, அவசரச் சட்டங்களை ஆளுநர் கிடப்பில்போட்டதாகக் குற்றச்சாட்டுகளும் உண்டு. இந்நிலையில் இந்த தாக்குதல் சதி குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT