Published : 12 Dec 2023 08:30 AM
Last Updated : 12 Dec 2023 08:30 AM
போபால்: மத்திய பிரதேச மாநில புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. 230 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையின் பதவிக் காலம் விரைவில் முடியஉள்ளது. இதையடுத்து அங்கு கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. முன் எப்போதும் இல்லாத அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 66 இடங்கள் மட்டுமே கிடைத்தது.
எனினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகியும் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. இதனிடையே, ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக ஓபிசி பிரிவு தலைவர் கே.லட்சுமண் மற்றும் கட்சியின் தேசிய செயலாளர் ஆஷா லக்ரா ஆகிய 3 பேர் ம.பி.க்கானபார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து சிவராஜ் சிங் சவுகானுக்கு பதில் வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், போபால் நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில், மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உஜ்ஜயினி தக்சின் தொகுதி எம்.எல்.ஏ. மோகன் யாதவ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, மோகன் யாதவ், ஆளுநர் மங்குபாய் படேலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதுபோல ஜெக்திஷ் தேவ்தா மற்றும் ராஜேஷ் சுக்லா ஆகியோர் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மோகன் யாதவ் கூறும்போது, “கட்சியின் சிறிய தொண்டன் நான். என்னை முதல்வராக தேர்ந்தெடுத்த மத்திய மற்றும் மாநில தலைமைக்கு நன்றி. உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுடன் என்னுடைய பொறுப்பை திறமையாக செய்ய முயற்சிப்பேன் என உறுதி அளிக்கிறேன்" என்றார்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கடந்த 1965-ம்ஆண்டு மார்ச் 25-ம் தேதி மோகன் யாதவ் (58)பிறந்தார்.சட்டம் படித்துள்ள இவர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றிய இவர், பாஜக மாணவரணியிலும் (ஏபிவிபி) முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் உஜ்ஜயினி தக்சின் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். அதன் பிறகு 2018 மற்றும் 2023 தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
இவர் சிவராஜ் சிங் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சீமா யாதவ் என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சத்தீஸ்கரில் நாளை பதவியேற்பு: சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின மூத்த தலைவருமான விஷ்ணு தியோ சாய் (59) நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நாளை பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT