Published : 11 Dec 2023 07:27 PM
Last Updated : 11 Dec 2023 07:27 PM

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: பின்னணி என்ன?

ம.பி.யின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் யாதவ் (நடுவில்)

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபாலில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் முகமாக அறியப்பட்டவர் சிவராஜ் சிங் சவுகான். பாஜக இம்முறை முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமலேயே தோ்தல் களத்தை எதிா்கொண்டது. தற்போது 3 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் உஜ்ஜைனியின் தெற்கு எம்எல்ஏ மோகன் யாதவ் (58 வயது) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சிவராஜ் சிங் சவுகானின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார்.

யார் இந்த மோகன் யாதவ்? - மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் (Ujjain) மார்ச் 25, 1965-ஆம் ஆண்டு பிறந்தவர் மோகன் யாதவ். இவர் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பூனம்சந்த் யாதவ். இவர் சீமா யாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் பி.எஸ்.சி, எல்.எல்.பி, எம்.பி.ஏ மற்றும் பி.எச்.டி உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றுள்ளார். 2013-ம் ஆண்டு உஜ்ஜைனி தொகுதியில் எம்எல்ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து 2018 மற்றும் 2023 உஜ்ஜைனி தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) ஆகிய அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர் எனக் கூறப்படுகிறது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ். இவர் மாநில மல்யுத்த சங்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேசமயம் மூன்று முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மோகன் யாதவ் கூறும்போது, “நான் கட்சியில் உள்ள கடைமட்ட ஊழியர். மாநிலத் தலைமைக்கும், மத்திய தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் என் பணியை மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

பாஜக அமோக வெற்றி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 3 மாநிலங்களிலும் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிக இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 164 தொகுதிகளில் ஆளும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸுக்கு 65 தொகுதிகள் கிடைத்துள்ளன. பாரதிய ஆதிவாசி கட்சி ஓரிடத்தை கைப்பற்றி உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்த முறை காங்கிரஸ் 49 தொகுதிகளை இழந்துள்ளது. பாஜகவுக்கு கூடுதலாக 55 இடங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x