Published : 11 Dec 2023 04:57 PM
Last Updated : 11 Dec 2023 04:57 PM

“காஷ்மீரின் காயங்கள் ஆற வேண்டும்” - சட்டப்பிரிவு 370 ரத்து வழக்கில் நீதிபதி எஸ்.கே.கவுல் உணர்வுபூர்வ கருத்து

நீதிபதி எஸ்.கே.கவுல்

புதுடெல்லி: “காஷ்மீரின் காயங்கள் ஆற வேண்டும். காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்துவிட்டனர். அங்கு நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (டிச.11) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தீர்ப்பின் இறுதியுரையை வாசித்தார். காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கிஷன் கவுல் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தீர்ப்பின் இறுதியுரை உணர்ச்சிகள் நிரம்பியதாக இருந்தது. அது தற்போது கவனம் பெற்றுள்ளது.

நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிக்கலம் முடிவடைய இன்னும் 15 நாட்கள்தான் உள்ளன. இந்நிலையில், அவர் ஜம்மு காஷ்மீர் மக்கள் சந்தித்த அத்துமீறல்கள் குறித்து உணர்வுபூர்வமான இறுதியுரையை வாசித்தார். அதில் நீதிபதி கவுல், ”இதில் சில உணர்வுபூர்வ குறுக்கீடுகள் இருக்கலாம். காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தின் ஊடுருவலால் மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். 1980-களில் தொடங்கி அங்கு எண்ணற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால், நடுநிலையான உண்மை கண்டறியும் நல்லிணக்க குழுவை அமைக்க நான் பரிந்துரைக்கிறேன். அந்தக் குழுவானது 1980-களில் தொடங்கி நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்கட்டும். அரசுக்குத் தெரிந்தே நடந்த உரிமை மீறல்களாக இருக்கட்டும், அரசு சாராத மீறல்களாக இருக்கட்டும், எல்லாவற்றையும் நடுநிலையாக விசாரிக்க வேண்டும்.

ராணுவம் என்பது எதிரிகளை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்டது. அதைக் கொண்டு ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கக்கூடாது. ஜம்மு, காஷ்மீரில் ராணுவம் நுழைந்ததால் அங்குள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். ஒருகாலத்தில் தீவிரவாத ஊடுருவல்களால் காஷ்மீர் மக்களில் ஒரு சாரார் புலம்பெயர்ந்தனர். அப்போது காஷ்மீருக்குள் ராணுவம் வரவழைக்கப்பட்டது. தேசம் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருந்ததால் அப்போது அது அவசியமானது. அதிலிருந்தே காஷ்மீர் மக்கள் தலைமுறை தலைமுறையாய் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். காஷ்மீரின் காயங்கள் ஆற வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கு வரலாற்றுச் சுமையை சுமந்துகொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்களாகிய நாங்கள் விவாதப் பொருளாகவே இருக்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும். ஆனால், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும். 2024 செப்டம்பர் 30-க்குள் தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்பதால் அது நடைபெற்றே ஆக வேண்டும். இத்தனை ஆண்டுகளில் நான் ஒவ்வொரு முறை காஷ்மீர் செல்லும்போதும் நான் காஷ்மீரின் முறிந்துபோன சமூகங்கள் பல தலைமுறைகளாக அனுபவித்துவரும் காயங்களின் விளைவுகளை உணர்கிறேன். காஷ்மீர் மக்களின் துயரமான அனுபவங்களைக் கண்டு நான் வேதனைப்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், இப்போது எனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு இந்த முடிவுரையை எழுதியுள்ளேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x