Published : 11 Dec 2023 01:15 PM
Last Updated : 11 Dec 2023 01:15 PM
புதுடெல்லி: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்கின் மகனுமான கரண் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே என்றும், எனவே அதனை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கரண் சிங், ”இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மத்திய அரசு என்ன செய்ததோ அது சட்டப்படி செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட சிலருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்காது. அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தவிர்க்க முடியாதது. ஏனெனில், உச்ச நீதிமன்றம் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. தேவையில்லாமல், சுவற்றில் முட்டிக்கொள்வதில் அர்த்தம் இல்லை. அவர்கள் தங்கள் சக்தியை அடுத்த தேர்தலில் காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எதிர்மறை எண்ணங்களை விடுத்து தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளித்திருப்பதாக ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT