Published : 02 Jan 2018 12:01 PM
Last Updated : 02 Jan 2018 12:01 PM
க
டந்த 1960-களில் நடந்த 2 சம்பவங்கள் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. எனக்கு 17 வயதிருக்கும்போது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் உதவித் தொகையுடன் இளங்கலை படிப்புக்கு இடம் கிடைத்தது. அமெரிக்க குடும்பம் ஒன்று பணம் கொடுத்ததால்தான் என்னால் அங்கு படிக்க முடிந்தது. எனக்கு அந்தக் குடும்பம் யாரென்றே தெரியாது. நான் அங்கு படித்தபோது, வாங்கிய கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாத நாடுதான் இந்தியா என்ற அவப்பெயர் இருந்தது. பஞ்ச காலத்தில், பட்டினியில் இருந்து இந்தியர்களைக் காப்பாற்ற தினமும் அமெரிக்காவில் இருந்து தானியங்கள் ஏற்றிய கப்பல்கள் 10 நிமிடத்துக்கு ஒரு முறை இந்திய துறைமுகங்களுக்கு வந்துசேரும். விரைவில் இந்த நிலைமை மாறியது.
நார்மன் பர்லோ என்ற அமெரிக்க விஞ்ஞானி, ராக்பெல்லர் அறக்கட்டளை உதவியுடன் மெக்ஸிகோவில் செயல்படும் ஆராய்ச்சிக் கூடத்தில் வீரிய ரக கோதுமை விதைகளைக் கண்டுபிடித்தார். அது இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, விவசாய உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தியது. லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் வேளாண் அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியத்துக்குத்தான் இந்த பெருமை போய்ச்சேரும். அவர்தான் உடனே 2 கப்பல்களில் இந்த வீரிய விதைகளை இறக்குமதி செய்தி பஞ்சாபில் பயிரிட உத்தரவிட்டவர்.
இந்த இரண்டு சம்பவங்களும் அமெரிக்கர்களின் தயாள குணத்தைக் காட்டுவதுதான். தனிப்பட்ட முறையில் முகம் தெரியாத ஒருவர் கல்விக்கு உதவித்தொகை அளிக்கிறார். தேசிய அளவில், ராக்பெல்லர் அறக்கட்டளை இந்தியாவில் வளர்ச்சியை ஏற்படுத்திய ஆராய்ச்சிக்கு உதவி இருக்கிறது.
இந்தியாவிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. . 2017-ம் ஆண்டுக்கான பெயின்-தஸ்ரா நன்கொடை அறிக்கையில், இந்தியாவில் தனியார் அளிக்கும் நன்கொடைகள் கடந்த 5 ஆண்டுகளில், வெளிநாட்டு நன்கொடை மற்றும் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் மூலம் அளிக்கும் நன்கொடைகளை விட வேகமாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 2011-ல் ரூ.6 ஆயிரம் கோடியாக இருந்த தனியார் நன்கொடை, 2016-ல் 6 மடங்கு அதிகரித்து, ரூ.36 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அரசு ரூ.1.50 லட்சம் கோடி நன்கொடை அளிக்கிறது.
பணக்கார இந்திய தொழிலதிபர்கள் கோயில் உண்டியலில்தான் பணத்தைக் கொட்டுவார்கள், ஏழைகளுக்கு உதவ மாட்டார்கள் என்ற தப்பான எண்ணம் நிலவுகிறது. 97 சதவீத வரி அமலில் இருந்த லைசன்ஸ் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகுதான் செல்வம் குவிப்பது இங்கு சாத்தியமானது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அடுத்ததாக சில தலைமுறைகள் சம்பாதித்த பிறகுதான் நன்கொடை அளிப்பது ஆரம்பமாகும் என்பதையும் உணர வேண்டும். உதாரணமாக, லட்சுமி மிட்டல். இவர் பிரான்ஸில் நடந்த தனது மகள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தினார். இரண்டாவது தலைமுறை பணத்தை விரும்பவில்லை. அதிகாரத்தை விரும்பியது. அதனால்தான் கென்னடிகளும் ராக்பெல்லர்களும் அரசியலில் குதித்தார்கள். அதிகாரமும் பணமும் கொண்ட தலைமுறைக்கு பிறந்த 3-வது தலைமுறையினர் சமூகத்தில் மரியாதையை விரும்பினார்கள். அதனால் கலைகளை ஆதரித்தார்கள். நன்கொடைகளை அளித்தார்கள்.
வர்த்தகர் குடும்பம் பற்றிய ஜெர்மனி எழுத்தாளர் தாமஸ் மான் எழுதிய எனக்குப் பிடித்த புட்டின்புரூக்ஸ் என்ற நூலில், இதுபற்றி குறிப்பிடுகிறார். 3 தலைமுறைகளில் சிக்கனமான முதல் தலைமுறை செல்வத்தை குவிக்கிறது. அவருடைய மகன் செனட்டராகிறான். பேரன் தனது வாழ்க்கையை இசைக்கு அர்ப்பணிக்கிறான். ஆனால் விதிவிலக்கும் இருக்கிறது. 19 மற்றும் 20-ம் நூற்றாண்டில் செல்வத்தைக் குவித்த ஸ்டீல் கிங் ஆண்ட்ரூ கார்னேகி, தனது செல்வத்தில் 90 சதவீதத்தை அமெரிக்க நூலகங்களை உருவாக்குவதில் செலவிட்டார்.
மிகப் பெரிய மாற்றம் என்னவென்றால், தொழிலதிபர்கள் தங்கள் காலத்திலேயே தானமாக அள்ளிக் கொடுக்கிறார்கள். 3-வது தலைமுறைதான் வாரி வழங்கும் என்பதை உடைத்த சக் பீனேயை பின்பற்றி, பில் கேட்ஸ் தான் சம்பாதித்ததை வாரி வழங்கி வருகிறார். அஸீம் பிரேம்ஜி, நிலகேனி, ஷிவ் நாடார், சுனில் மிட்டல், அஷீஸ் தவான் மற்றும் பலர் நன்கொடை அளிப்பதற்கு பில்கேட்ஸ் தூண்டுகோலாக இருக்கிறார். தவான், தன்னைப் போன்றவர்களுடன் இணைந்து, அசோகா என்ற பெயரில் உலகத் தரம் வாய்ந்த பல்கலையை உருவாக்கி இருக்கிறார். இங்கு சேர்ந்தால், யாரோ ஒரு நன்கொடையாளர் மூலம் கல்வி உதவித்தொகை கண்டிப்பாகக் கிடைக்கும். அதேபோல் ஷிவ் நாடார் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை உருவாக்கி வருகிறார்.
இந்திய தொழிலதிபர்கள் கஞ்சர்கள், ஈவு இரக்கமற்றவர்கள் என்ற இடதுசாரிகளின் தவறான பிரச்சாரத்தையும் பெயின் அறிக்கை உடைத்திருக்கிறது. இந்தியாவில் அந்த காலத்தில் இருந்தே வள்ளல் போல் வாரி வழங்குவது இருந்திருக்கிறது என்பதை பஞ்சதந்திர கதைகள் மூலம் அறியலாம். அதில் வயதான ஒரு வியாபாரி, தனது வாரிசிடம் வெற்றிகரமான வாழ்க்கைக்கு 4 விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டுமென கூறுகிறான். முதலில் பொருள் ஈட்டு. அடுத்து, அதைப் பதுக்காமல் பெருக்கு. மூன்றாவதாக, ஈட்டிய பொருளை எப்படி செலவழிக்க வேண்டும் எனத் தெரிந்து கொள். இறுதியாக, ஈன்ற பொருளை பிறருக்கு தானம் செய் என்கிறான்.
பணக்காரர்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. அவர்களும் தமது வாரிசுகள் விரும்புவதை செய்ய கற்றுக்கொள்ள தேவையான பணத்தைக் கொடுக்க விரும்புகிறார்கள். ஆனால், அதிகம் கொடுத்து சோம்பேறியாக்குவதை விரும்புவதில்லை. அதனால்தான், இரண்டுக்கும் நடுவில், உழைப்பின் முக்கியத்துவத்தையும் அறிய வைக்கிறார்கள். அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஜான் டி. ராக்பெல்லர், ஆரம்பத்தில் இருந்தே உழைக்கவும் சேமிக்கவும் பிறகு தானம் செய்யவும் பயிற்றுவிக்கப்பட்டேன் என்கிறார்.
மனித வள குறீயீட்டு பட்டியலில் இந்தியா மிகவும் கீழே 130-வது இடத்தில் இருக்கிறது. இங்குள்ள பணக்காரர்கள், ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்ற சிறந்த தொண்டு அமைப்புகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலம், அவை மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய முடியும். பல நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் மூலம் முக்கிய பங்காற்றி வருகின்றன. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களையும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. தான தர்மம், நன்கொடை.. எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.. இந்த விஷயத்தில் அமெரிக்க பாரம்பரியத்தில் இருந்து இந்தியர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT