Published : 10 Dec 2023 06:56 AM
Last Updated : 10 Dec 2023 06:56 AM

சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாராகும் 50-வது வந்தே பாரத் ரயில்

சென்னை: சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் நாட்டின் 50-வது வந்தேபாரத் ரயில் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் இந்த ரயிலைத்தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு அனுப்ப ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.

2019-ல் வந்தே பாரத் ரயில்சேவையை டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, டெல்லி-காத்ரா, காந்திநகர்-மும்பை என பல்வேறு வழித்தடங்களில் 45-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு, சென்னை-விஜயவாடா, சென்னை- திருநெல்வேலி. திருவனந்தபுரம்-காசர்கோடு உள்ளிட்ட வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.

இதையடுத்து, அதிக அளவில் வந்தே பாரத் ரயிலை தயாரித்து வழங்க ஐசிஎஃப்-க்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் 50-வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே,சென்னை ஐசிஎஃப் 2023-24-ம் நிதியாண்டில் 736 வந்தே பாரத் ரயில்பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்துக்கு 2 அல்லது3 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தலா 16 பெட்டிகளைக் கொண்ட 46 வந்தே பாரத் ரயில்கள்அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட92 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் 50-வது வந்தே பாரத் ரயில் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இந்த ரயிலை தயாரித்து வழங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x