Published : 09 Dec 2023 06:02 PM
Last Updated : 09 Dec 2023 06:02 PM

“மஹுவா பதவி நீக்கம் வேதனையே... அது சோகமான நாள்!” - பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே

நிஷிகாந்த் துபே | கோப்புப்படம்

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே , "அது மகிழ்ச்சியாக இல்லை. சோகமான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தேசத்தின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. நேற்று மகிழ்ச்சியான நாள் இல்லை. சோகமான நாள்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப திரிணமூல் எம்பி மஹுவா ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக பாஜக எம்பி வினோத்குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. கடந்த நவம்பர் 9-ம் தேதி நெறிமுறைகள் குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் 500 பக்க அறிக்கை வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஆட்சேபித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது மஹுவா மொய்த்ரா விவகாரம் தொடர்பாக 30 நிமிடங்கள் விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. விவாதத்தின்போது மஹுவா மொய்த்ரா தனது கருத்தை எடுத்துரைக்க அனுமதி கோரினார். இதற்கு அவைத் தலைவர் பதிலளித்தபோது, "நெறிமுறைகள் குழுவின் விசாரணையின்போது மொய்த்ரா தனது கருத்தை பதிவுசெய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை குறித்து மக்களவையில் கருத்துகளை எடுத்துரைக்க முடியாது. இதற்கு நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை" என்று தெரிவித்தார்.

சுமார் 30 நிமிட விவாதத்துக்குப் பிறகு மொய்த்ராவின் எம்பி பதவியை பறிப்பது தொடர்பான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மை எம்பிக்களின்ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி அதிகாரபூர்வமாக பறிக்கப்பட்டது.

தனது பதவி பறிக்கப்பட்டப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஹுவா, "நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணமோ, பொருட்களோ பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. எனது மின்னஞ்சலை பயன்படுத்தும் அதிகாரம் பகிரப்பட்டது என்ற ஒரே ஒரு ஆதாரத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, நாடாளுமன்றத்தில் என் வாயை அடைத்துவிட்டால் போதும், அதானி பிரச்சினை தீர்ந்துவிடும் என மோடி அரசு நினைக்கிறதுபோல். ஆனால், நீங்கள் ஒரு பெண் எம்.பி.யின் வாயை அடைக்க எந்த எல்லை வரை செல்வீர்கள் என்பதையே இந்த பதவிப் பறிப்பு நிகழ்வு காட்டுகிறது.

மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு என்னை வெளியேற்ற எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், இந்த அரசு நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவினை எதிர்க்கட்சிகளை 'புல்டோஸ்' செய்யும் ஆயுதமாக மாற்றி இருக்கிறது. நெறிமுறைக் குழு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இதுவே அல்ல. எனக்கு இப்போது 49 வயதாகிறது. நான் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவேன். இது பாஜக ஆட்சி முடியும் காலம். நான் மீண்டும் வருவேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x