Published : 09 Dec 2023 01:06 PM
Last Updated : 09 Dec 2023 01:06 PM

தெலங்கானா | தற்காலிக சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் அக்பருதீன் ஒவைசி நியமனம்: பதவி ஏற்பை புறக்கணித்த பாஜக எம்எல்ஏக்கள்

அக்பருதீன் ஒவைசி

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவைசி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்னிலையில் பதவி ஏற்பதை பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் புறக்கணித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் கோஷாமஹால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் பாஜக எம்எல்ஏக்கள் யாரும் பதவி ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். தற்காலிக சபாநாயகர் நியமனத்துக்கு முன்பாக இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில், "உயிருள்ள காலம் வரை நான் ஏஐஎம்ஐஎம் முன்பு பதவி ஏற்றுக்கொள்ளமாட்டேன். முழுநேர சபாநாயகர் நியமிக்கப்பட்ட பின்னர் நான் பதவி ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ள ராஜா சிங், கடந்த காலங்களில் இந்துக்களுக்கு எதிராக கருத்துக்கள் கூறிய ஒரு நபர் (அக்பருதீன் ஒவைசி) எப்படி நான் பதவி ஏற்றுக்கொள்ள முடியும் " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது முன்னவர் கேசிஆரைப் போல ஏஐஎம்ஐஎம் கட்சிக்குக்கு பயப்படுகிறார். அதனால் அக்பருதீன் ஒவைசியை தற்காலிக சபாநாயகராக நியமிக்க அனுமதித்துள்ளார்.

பேரவையில் உள்ள மூத்த உறுப்பினரையே தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது மரபு. ஆனால் புதிய முதல்வர் சிறுபான்மையினரையும் ஏஐஎம்ஐஎம் கட்சியையும் சமாதானப்படுத்துவதற்காக அக்பருதீனை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

ராஜா சிங் பதவி ஏற்பை புறக்கணிப்பது முதல்முறை இல்லை. கடந்த 2018ம் ஆண்டும் ஏஐஎம்ஐஎம் கட்சியில் இருந்து தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டதால் பதவி ஏற்பை புறக்கணித்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷண் ரெட்டி கூறுகையில், "தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி நியமிக்கப்பட்டதற்கு பாஜக எதிராக உள்ளது. இது தற்காலிக சபாநாயகர்களாக மூத்த எம்எல்ஏக்கள் நியமிக்கப்படும் மரபுக்கு எதிரானது. இந்த தற்காலிக சபாநாயகரின் முன்பாக பதவி ஏற்பதை பாஜக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பார்கள். சட்டப்பேரவைக்கு சபாநாயகர் நியமிக்கப்பட்ட பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள். எங்களால் ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டுவைத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து நாங்கள் ஆளுநரிடம் தெரிவிப்போம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x