Published : 09 Dec 2023 09:06 AM
Last Updated : 09 Dec 2023 09:06 AM
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக சடங்குகள் ஜனவரி 16-ம் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த சடங்குகளை செய்ய நாடு முழுவதிலும் இருந்து வேதங்களின் அனைத்து கிளைகளில் இருந்தும் 121 அறிஞர்கள் அயோத்தி வருகின்றனர். இந்த வேத அறிஞர்களை காசி ஆச்சாரியரான பண்டிட் மதுராநாத் தீட்சித் வழிநடத்த உள்ளார்.
இவர் சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவை தலைமையேற்று நடத்திய 17-ம் நூற்றாண்டு காசி அறிஞர் கங்கா பட் பரம்பரையில் வந்தவர் ஆவார்.
விழா குறித்து மூத்த அறிஞர் மதுராநாத் தீட்சித் கூறும்போது ”காசியின் பழம்பெரும் துறவிகளின் ஆசிர்வாதத்தால் ராம் லல்லாவின் கும்பாபிஷேகத்தை கண்காணிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராமரின் ஆசீர்வாதத்துடன் எனது கடமைகளைச் செய்வேன்” என்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை, இதற்கென அமைக்கப்பட்ட ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்த அறக்கட்டளை தான் கோயிலை நிர்வகிக்க உள்ளது.
ராம் லல்லா எனப்படும் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதை முன்னிட்டு, ஜனவரி 16-ம் தேதி முதல் மகாபூஜைக்கான சடங்குகள் தொடங்கும் என்று கோயில் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடங்குகளுக்குப் பிறகு ஜனவரி 22 மதியம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை வழக்கமான சடங்குகள் செய்யப்பட்டு ராமர் சிலை நிறுவப்பட வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஆரத்தி வழிபாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT