Published : 08 Dec 2023 01:10 PM
Last Updated : 08 Dec 2023 01:10 PM
புதுடெல்லி: பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 5 வது நாளான இன்றும் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியிலேயே அவை கூடியது. திரிணமூல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா மீதான மக்களவை நெறிமுறைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் அது தொடர்பாக எழுந்த அமளியால் மக்களவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே சாபாநாயகர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.
பின்னர் 12 மணிக்கு மீண்டும் மக்களவைக் கூடியது அப்போது பாஜக எம்.பி., விஜய் சோன்கர், திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்தும் இந்த அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை மதியம் 2 மணிவரை ஒத்திவைத்தார். அப்போது சபாநாயகராக இருந்த பாஜக எம்பி ராஜேந்திர அகர்வால், "தற்போது அறிக்கை தாக்கல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன் மீது அவை முடிவெடுக்கும் என்றார்.
முன்னதாக இந்த பரிந்துரை குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய திங்கள் கிழமை அன்று பட்டியலிபட்டிருந்தது. ஆனால் அன்று தாக்கல் செய்யப்படவில்லை. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் கூறுகையில், "நெறிமுறைக் குழுவின் அறிக்கையும் தீர்மானமும் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் என்னிடம் தெரிவித்தார். அதற்கு நான், இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதனை எதிர்க்கின்றன; அதுகுறித்து விவாதிக்க விரும்புகின்றன. எனவே அறிக்கை மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் சபாநாயகரிடம் தெரிவித்தேன். எனது கருத்தைக் கேட்ட சபாநாயகர் அனைத்து விவாதங்களையும் 30 நிமிடங்களுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்" என்றார்.
மஹுவா கருத்து: இதனிடையே கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, "துர்கா மாதா வந்துவிட்டாள் இனி நாம் பார்க்கலாம்..ஒரு மனிதன் மீது தீய சக்தி விழும்போது முதலில் அறிவு அழிகிறது. அவர்கள் ‘வஸ்த்ரஹரன்’(துகிலுரித்தல்) ஆரம்பித்து விட்டார்கள்.இப்போது நீங்கள் மகாபாரதப் போரைக் காண்பீர்கள்" என்றார்.
பின்னணி: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவ.9ம் தேதி வெளியிட்டது.
அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 6-4 என்ற கணக்கில் பரிந்துரை நிறைவேறியது. காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தார். மற்ற நான்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் மறுப்புக் குறிப்புகளை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT