Published : 08 Dec 2023 11:37 AM
Last Updated : 08 Dec 2023 11:37 AM

கேள்விக்கு பணம் பெற்ற விவகாரம்: மஹுவாவை வெளியேற்றக் கூறும் நெறிமுறைக்குழு பரிந்துரை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

புதுடெல்லி: பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முன்னதாக இந்த பரிந்துரை குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய திங்கள் கிழமை அன்று பட்டியலிபட்டிருந்தது. ஆனால் அன்று தாக்கல் செய்யப்படவில்லை. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் கூறுகையில், "நெறிமுறைக்குழுவின் அறிக்கையும் தீர்மானமும் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் என்னிடம் தெரிவித்தார். அதற்கு நான், இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதனை எதிர்க்கின்றன; அதுகுறித்து விவாதிக்க விரும்புகின்றன. எனவே அறிக்கை மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் சபாநாயகரிடம் தெரிவித்தேன். எனது கருத்தைக் கேட்ட சபாநாயகர் அனைத்து விவாதங்களையும் 30 நிமிடங்களுக்குள் முடித்துக்கொள்ளவேண்டும் என்பது போன்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்" என்றார்.

இதனிடையே பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து பெரிய கட்சிகளும் வெள்ளிக்கிழமை தவறாமல் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. நெறிமுறைக்குழுவின் அறிக்கை பட்டியலிடப்பட்டதும், தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுப்பார்.

இதனிடையே மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன்பாக தீர்மானத்தின் மீது விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. "இந்தத் தீர்மானம் பட்டியலிடப்பட்டால், வெறும் இரண்டரை மணி நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த தீர்மானத்தின் மீது முழுமையான விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் முழுமையாக வலியுறுத்துவோம்" என்று நெறிமுறைக் குழு உறுப்பினராக இருந்து அதன் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் டேனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவ.9ம் தேதி வெளியிட்டது.

அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 6-4 என்ற கணக்கில் பரிந்துரை நிறைவேறியது. காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தார். மற்ற நான்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் மறுப்புக் குறிப்புகளை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x