Published : 07 Dec 2023 03:37 PM
Last Updated : 07 Dec 2023 03:37 PM

மம்தா குறித்து மத்திய இணையமைச்சர் சர்ச்சைப் பேச்சு - திரிணமூல் காங். பெண் எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங்கை கண்டித்து, திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 10-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, மகேஷ் பட், அனில் கபூர் மற்றும் பலருடன் இணைந்து அவர் மேடையில் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து, மம்தா பானர்ஜி திரைப்பட விழாவில் பங்கேற்று நடனமாடுவது ஏற்புடையதல்ல என ஒரு நேர்காணலின்போது மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்திருந்தார். அதோடு சில சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கருத்து தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய கிரிராஜ் சிங், “டிஎம்சி தலைவர்கள் எனது வார்த்தைகளை பெரிதுபடுத்துகிறார்கள்” என்று விளக்கமளித்துள்ளார். கிரிராஜ் சிங்கின் விமர்சனத்தை நிராகரித்த மம்தா பானர்ஜி, "எனக்கு நடனமாடத் தெரியாது. சில சமயங்களில் பழங்குடியினருக்கு ஆதரவாக நடனமாடுவேன். அன்று, அனில் கபூர் என்னை மேடைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் பாலிவுட்டை மதிக்கிறோம். மற்றப்படி எதுவும் கிடையாது” என்றார்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை கண்டித்து, திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (டிச.7) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய திரிணமூல்.காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “நாட்டிலுள்ள ஒரே பெண் முதல்வர் குறித்து இதுபோன்ற வெட்கமற்ற அமைச்சர்கள் எப்படி இவ்வாறு பேசலாம். இந்தியாவின் நிலை இதுதான். பாஜக அரசு மற்றும் பாஜக அமைச்சர்கள் அனைவரும் பெண் வெறுப்பாளர்கள் மற்றும் ஆணாதிக்கவாதிகள். அவர்கள் பெண்களை வெறுக்கிறார்கள். கிரிராஜ் சிங் வெட்கமற்றவர். இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x