Published : 07 Dec 2023 02:10 PM
Last Updated : 07 Dec 2023 02:10 PM

மிக்ஜாம் புயல் பாதிப்பு | தமிழகத்துக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.493 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் சேதத்தின் அளவு வேறுபட்டாலும், மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்கள் மூழ்கியுள்ளன. புயலின் பாதிப்புகளை நிர்வகிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மத்திய அரசின் இரண்டாவது தவணை பங்களிப்பை முன்கூட்டியே விடுவிக்கும்படி உள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இரண்டாவது தவணைத் தொகையாக ஆந்திராவுக்கு ரூ.493 கோடியும், தமிழகத்துக்கு ரூ.450 கோடியும் விடுவிக்கப்படுகிறது.

மத்திய அரசு இரு மாநிலங்களுக்கான இதே அளவிலான முதல் தவணைத் தொகையை ஏற்கெனவே விடுவித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் நாங்கள் அவர்களுடன் உறுதுணையாக நிற்போம். விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று உறுதியளிக்கிறோம்" என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் - முதல்வர் கடிதம்: முன்னதாக தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ''சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழை பொழிந்தது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராஜ்நாத் சிங் ஆய்வு: இதனிடையே, மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் வியாழக்கிழமை பார்வையிட்டார்.

சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்துக்கு ரூ.561.29 கோடி: அதேபோல், சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்துக்காக ரூ.561.29 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்றாவது மிகப் பெரிய வெள்ள பாதிப்பைச் சென்னை சந்திக்கிறது. அதிகமான மழைப்பொழிவுகளால் பெருநகரங்களில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம்.

செயல்பாடுகளின் அணுகுமுறை வழிகாட்டுதலின் படி, தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், முதல் நகர்ப்புற வெள்ளத்தணிப்பு திட்டத்துக்காக ரூ.561.29 கோடியை, சென்னை பேசின் திட்டத்துக்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற மேலாண்மை நடவடிக்கைக்காக ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது மத்திய அரசின் உதவியான ரூ.500 கோடியை உள்ளடக்கியது. இந்த வெள்ளத் தணிப்பு திட்டம் சென்னையை வெள்ளத்தைத் தாங்கக்கூடியதாக மாற்ற உதவும். நகர்ப்புற வெள்ள தணிப்பு மேலாண்மை திட்டத்தில் இது முதலாவது முயற்சியாகும். மேலும் இது பரந்த அளவில் நகர்ப்புற வெள்ள மேலாண்மையை மேம்படுத்த உதவும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x