Published : 07 Dec 2023 11:47 AM
Last Updated : 07 Dec 2023 11:47 AM
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதா... இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது குறித்து தமிழக அரசு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறதா... இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. தமிழகத்தில் அப்பாவி இளைஞர்களின் உயிர்களைப் பறிக்கும் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லும் என்றாலும் கூட, ஆன்லைன் ரம்மி, போக்கர் திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என்று கடந்த நவம்பர் 9-ஆம் நாள் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாக சட்ட அமைச்சர் ரகுபதி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், இன்று வரை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு எண்ணிடப் பட்டதாகவோ, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதாகவோ தெரியவில்லை.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் விசாரணைக்கு வராததை பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மீண்டும் மக்களை வேட்டையாடத் தயாராகி விட்டன. ஆன்லைனில் ரம்மி ஆடினால், ரூ.3.5 கோடி பரிசு என்று ஆசைகாட்டி ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் வலைவிரித்திருக்கின்றன. அதை நம்பி ஆன்லைன் ரம்மி ஆடும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் தங்கள் பணத்தையும் இழந்து கடனாளி ஆகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த இளைஞர்கள் தற்கொலை என்ற செய்தி மீண்டும் வழக்கமானதாகி விடும். இது தடுக்கப்பட வேண்டும்.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவற்றுக்கு தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறதா, இல்லையா? என்பதை தமிழக அரசு உடனடியாக விளக்க வேண்டும். மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், உடனடியாக அதை விசாரணைக்கு கொண்டு வரவும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT