Published : 07 Dec 2023 11:40 AM
Last Updated : 07 Dec 2023 11:40 AM
புதுடெல்லி: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் யார் யாரை முதல்வர்களாகத் தேர்வு செய்வது என்பது குறித்து பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே நேற்றிரவு(புதன்கிழமை) டெல்லி சென்றார்.
நடந்து முடிந்து 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4 மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தென்மாநிலமான தெலங்கானாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ரெவந்த் ரெட்டி மாநில முதல்வராக இன்று(வியாழக்கிழமை) பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார். ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் யார் யாரை முதல்வர்களாக தேர்வு செய்வது என்பது குறித்து பாஜக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இம்மாநிலங்களில் புதியவர்கள் முதல்வர்களாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வுப்பட்டியலில் முன்னணியில் இருப்பவருமான வசுந்தரா ராஜே புதன்கிழமை இரவு டெல்லி சென்றார். விமானநிலையத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த வசுந்தரா, முதல்வர் தேர்வு குறித்த கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தான் தனது மருமகளை பார்க்க டெல்லி வந்துள்ளதாக அவர் கூறினார்.
முன்னதாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 3 மாநிலங்களிலும் யார் யாரை முதல்வர்களாக தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், 3 மாநிலங்களின் சட்டப்பேரவை கட்சி கூட்டங்களுக்கு மேலிடப் பார்வையாளர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘முதல்வர்கள் தேர்வு குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக, கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை கட்சியின் மேலிடம் மதிப்பீடு செய்யும். யாரும், தங்களின் பலத்தை காட்ட எம்எல்ஏக்களை அணி சேர்ப்பதை மூத்த தலைவர்கள் எவரும் விரும்பவில்லை’’ என்றார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவித்து எம்எல்ஏக்கள் அணி சேர்வதாக வரும் தகவலை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
ராஜஸ்தானில் யார் முதல்வர் என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது. ராஜஸ்தானில் பாஜக புதிய எம்எல்ஏக்கள் பலர், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி ஆகியோரை சந்தித்து பேசி வருகின்றனர். ராஜஸ்தான் மாநில பாஜக பொறுப்பாளர் அருண் சிங்கும், ஜோஷியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரசேகருடனும் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் முதல்வருக்கான போட்டியில் உள்ளனர்.
ஜோஷி, அருண் சிங் ஆகியோர் டெல்லியில் டிச.4-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்பும் பல கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதுகுறித்து அருண் சிங் கூறும்போது, ‘‘பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், என்ன முடிவு எடுத்தாலும், அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும். முதல்வர்கள் தேர்வு குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT