Published : 07 Dec 2023 06:15 AM
Last Updated : 07 Dec 2023 06:15 AM
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா 2023, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2023 ஆகிய இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த மசோதாக்கள் மீது கடந்த 2 நாட்களாக அவையில் விவாதம் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துப் பேசியதாவது:
ஜம்முவில் முன்பு 37 பேரவைஇடங்கள் இருந்தன. தற்போது43 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் முன்பு 46 பேரவைஇடங்கள் இருந்தன. தற்போதுஅவை 47 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி நம்முடையது என்பதால், நாங்கள் 24 பேரவை இடங்களை ஒதுக்கியுள்ளோம். ஆக மொத்தம் 114 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் நம் நாட்டின் பகுதிதான்.
நான் இங்கு கொண்டு வந்துள்ள மசோதா, அநீதி இழைக்கப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது, அவர்களுக்கு உரிமைகளை வழங்குவது தொடர்பானதாகும்.
கடந்த 70 ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்ட, அவமதிக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான உரிமைகளை வழங்குவது தொடர்பானது இந்த மசோதா.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த 2 தவறுகளால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் தவறு, பாகிஸ்தானுடனான போரில் நமது ராணுவம் வெற்றி முகத்தில் இருந்து வந்த நேரத்தில் போர்நிறுத்தத்தை இந்தியா அறிவித்தது ஆகும். 3 நாட்களுக்குப் பிறகு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இன்று இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.
இரண்டாவதாக, உள்நாட்டுப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னாள் பிரதமர் நேரு எடுத்துச் சென்றதாகும்.
இவை இரண்டுமே மாபெரும் வரலாற்றுத் தவறுகளாகும்.பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதச் சம்பவம் எதுவும் நிகழ்வில்லை. 2026-ம்ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரை நாம் வெற்றி கொள்வோம்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதி நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முயல்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே பாஜக அரசின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT