Published : 07 Dec 2023 07:21 AM
Last Updated : 07 Dec 2023 07:21 AM
புதுடெல்லி: மாரடைப்பால் ஏற்படும் திடீர்மரணங்களை தடுக்க நாடு முழுவதும் பல லட்சம் பேருக்கு நேற்று சிபிஆர் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாரடைப்பு ஏற்படுவோருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சைசிபிஆர் (கார்டியோ பல்மனரிரிசஸிடேஷன்) என அழைக்கப்படுகிறது. மாரடைப்பால் ஒருவரின் இதயம் செயலிழக்கும் போது அதை மீண்டும் செயல்பட வைக்க சிபிஆர் அவசியமாகிறது.
தற்போது இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பால் திடீர் மரணங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு நாடு முழுவதும் மக்களுக்கு சிபிஆர் பயிற்சி அளிக்க சுகாதார அமைச்சகத்தின் தேசிய கல்வி வாரியம் முடிவு செய்தது. இதன்படி நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நேற்று சிபிஆர் பயிற்சிஅளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இப்பயிற்சி பெற்றனர்.
இதுகுறித்து தேசிய கல்வி வாரியமருத்துவர் அபிஜித் சேத் கூறும்போது, “நாடு முழுவதும் மாரடைப்பால் மரணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை அல்லது ஆம்புலன்ஸ் வரும் வரை அவர்களின் உயிரை காப்பாற்ற சிபிஆர் உதவியாக இருக்கும். இப்போதைய பயிற்சி பட்டறையில் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது ஆனால் இந்தப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் மேலும் அதிகமானவர்களுக்கு சிபிஆர் பயிற்சி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரித்துஇருப்பதற்கும் கரோனா பாதிப்புக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை” என்றார்.
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்சமீபத்தில் நடத்திய ஆய்வில், கரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்பால் திடீர் மரணங்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு இல்லை. உண்மையில் அத்தகைய மரணங்களின் அபாயத்தை தடுப்பூசி தடுப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment