Published : 06 Dec 2023 05:09 PM
Last Updated : 06 Dec 2023 05:09 PM
புதுடெல்லி: மற்ற கட்சிகள் ஆம் ஆத்மி கட்சியின் செயல் திட்டங்களைத் திருடி வாக்குறுதிகளாக அளிப்பதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67-வது நினைவு தினம் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் பேசும்போது "அம்பேத்கர் 1913-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு படிக்கச் சென்றார். அவர் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பார். அம்பேத்கர் இன்னும் 10-15 ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால், அவர் நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்தியிருப்பார். எந்தக் கட்சியும் கல்வியில் கவனம் செலுத்தவில்லை" என்று கூறினார்.
மேலும், “மற்ற கட்சிகள் ஆம் ஆத்மி கட்சியின் அஜெண்டாவை திருடி, அதாவது இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இலவச கல்வி குறித்து எந்தவித வாக்குறுதியும் கொடுக்கவில்லை. கல்விக்கான உத்தரவாதத்தை ஆம் ஆத்மி மட்டுமே கொடுக்க முடியும். ஆம் ஆத்மி கட்சி கல்வித் துறையில் நிறைய சாதனைகளைச் செய்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் உள்ள மக்கள் வேண்டுமென்றே கல்வியறிவற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியால் நல்ல கல்வியை கொடுக்க முடியும் என்றால், 75 ஆண்டுகளில் ஏன் மக்கள் கல்வி கற்க முடியவில்லை. அவர்களிடமிருந்து அதிகாரத்தை பறிக்க தடைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் அனைவருக்கும் சேவை செய்ய பிறந்தவர்கள். நாட்டுக்காக போராடுவதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம், எங்கள் கொள்கைகளுடன் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT