Published : 06 Dec 2023 07:43 AM
Last Updated : 06 Dec 2023 07:43 AM

‘பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி: திமுக எம்.பி. செந்தில்குமார் பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் பேசியதாவது:

பசு கோமிய மாநிலங்கள் (`கோ மூத்ரா' மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இந்தி பேசும் மாநிலங்களை ‘கோ மூத்திர மாநிலங்கள்' என்று எம்.பி. செந்தில்குமார் குறிப்பிடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2022-ல் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போதும், இதுபோன்று எம்.பி. செந்தில்குமார் பேசினார். தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான விவாதத்தில் அவர் பேசும்போது இந்தி பேசும் மாநிலங்களை கோ மூத்திர மாநிலங்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது கோ மூத்திர மாநிலங்கள் என்று திமுக எம்.பி. செந்தில்குமார் பேசியிருப்பது சர்ச்சையையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது. தற்போது, திமுக எம்.பி. செந்தில்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதை பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

எதிர்ப்பு: இந்நிலையில் திமுக எம்.பி.யின் பேச்சுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:உழைக்கும் தமிழ் மக்களின் வியர்வையை குடித்து, ஊழல் மூலமே பிழைப்பு நடத்தும் கட்சியினர் இந்தி பேசும் மாநிலங்களை எள்ளி நகையாடுவது வெட்கக்கேடு. இந்தி பேசும் மாநிலங்கள் எங்கும் இண்டியா கூட்டணி வெற்றி பெறக்கூடாது என முடிவு கட்டிவிட்டது திமுக என தெரிகிறது. சனாதனத்தை பேசி காங்கிரஸை துடிக்க வைத்த பின் தற்போது மாட்டு மூத்திரம், பசு என காங்கிரஸை அழிக்க துவங்கி விட்டனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்டார்: இந்நிலையில் தமது பேச்சுக்கு திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் வருத்தமும் மன்னிப்பும் கேட்டு எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,

அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x