Published : 31 Jan 2018 03:01 PM
Last Updated : 31 Jan 2018 03:01 PM
ஆந்திர மாநிலம், நகரியிலிருந்து சட்டவிரோதமாக தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், இதற்கு உறுதுணையாக இருக்கும் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள நகரி தொகுதியில் உள்ள ஏரி, ஆறுகளிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளிச் செல்லும் கும்பல் குறித்து நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜாவிடம் அப்பகுதி மக்கள் இன்று புகார் மனு அளித்தனர்.
அதன்பேரில் ரோஜா, உடனடியாக சட்டவிரோதமாக மணல் அள்ளும் இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த டிராக்டர் உரிமையாளர்கள், கூலித் தொழிலாளர்களிடமும், வருவாய்த் துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் 'தி இந்து'விற்கு அளித்த பேட்டி வருமாறு:
நகரி பகுதியில் உள்ள ஏகாம்பர குப்பம், சத்திரவாடா பகுதிகளில் உள்ள ஆறு, ஏரிகளிலிருந்து சட்ட விரோதமாக ஒரு கும்பல் 24 மணி நேரமும் மணல் அள்ளிச் சென்று அவற்றை தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு விற்று வருகின்றன.
இந்தக் கும்பல் மணல் அள்ளுவதால் ஏற்படுத்தும் குழிகளில், தண்ணீர் வரத்து வரும் போது, தவறி விழுந்து பலர் உயிரிழக்கின்றனர். சமீபத்தில் கூட 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கமால் நகரி தாசில்தார் வெங்கடரமணா, மணல் கொள்ளையர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறார். காவல் துறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதனால், நகரியில் மணல் கொள்ளை வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசக் கட்சியினர் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு அப்பாவி உயிர்களைப் பறித்து வருகின்றனர்.
உடனடியாக இதுகுறித்து தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். மணல் கொள்ளையருக்கு உறுதுணையாக உள்ள தாசில்தாருக்கு இந்த மாநில அரசு சிறந்த தாசில்தார் எனும் விருதையும் வழங்கியுள்ளது என்பதை நினைத்தால் வெட்கப்பட வேண்டியுள்ளது.''
இவ்வாறு ரோஜா கூறினார்.
இதனைத் தொடர்ந்து மணல் அள்ளும் டிராக்டர்களை அப்பகுதி பெண்கள், எம்.எல்.ஏ ரோஜா தலைமையில் சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பதற்றம் உண்டானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT