Last Updated : 28 Jan, 2018 08:09 AM

 

Published : 28 Jan 2018 08:09 AM
Last Updated : 28 Jan 2018 08:09 AM

இந்தியா - கம்போடியா இடையே 4ஒப்பந்தங்கள் கையெழுத்து: பயங்கரவாதத்தை வேரறுக்க வலியுறுத்தல்

இந்தியா, கம்போடியா இடையே நீர் ஆதாரத் திட்டம் உட்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா வந்துள்ள கம்போடிய பிரதமர் சாம்டெக் ஹுன் சென் டெல்லியிலுள்ள ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக அப் போது இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும், சாம் டெக் ஹுன் சென் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து இந்தியா, கம்போடியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. கம்போடியாவிலுள்ள ஸ்டங் ஸ்வா ஹப் நீர் ஆதாரத் திட்டத்துக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக பேட்டியளித் தனர்.

அப்போது மோடி கூறும்போது, “உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா, கம்போடியா இணைந்து செயல்படும்.

கம்போடியா நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. வளர்ச்சியில் ஒத்துழைப்பு என்பது இரு நாட்டு உறவில் ஒருங்கிணைந்த அம்சமாக உள்ளது. பொருளாதாரம், சமூக வளர்ச்சி, வர்த்தகம், கலாச்சாரம், சுற்றுலா என அனைத்து துறைகளிலும் கம்போடியா நாட்டுனான உறவை வலுப்படுத்த இந்தியா முயற்சி செய்யும். எதிர்காலத்திலும் அந்த நாட்டுடனான உறவை வலுப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நமது மொழியானது சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் இருந்து உருவானது. நமது கலாசாரம், வரலாற்றுத் தொடர்புகளின் வேரானது மிகவும் ஆழமானது என்பது மகிழ்ச்சி தருகிறது. எனவே இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

கம்போடியாவிலுள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயிலை புதுப்பிக்கும் திட்டம், இரு நாடுகளின் கூட்டு கலாசார பாரம்பரியத் திட்டத்தில் உள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் எடுத்துக்காட்டாகும்.

கம்போடியா நாடு வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அங்கு பொருளாதாரம் வேக மாக வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகமும் மேம் படவேண்டும்.

இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் திருப்தியளிக்கின்றன” என்று மோடி கூறினார்.

பின்னர் கம்போடிய பிரதமர் சாம்டெக் ஹுன் சென் கூறும்போது, “பயங்கரவாதம் மனித குலத்துக்கு வந்த சாபக்கேடு. பயங்கரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அதை வேரறுக்க வேண்டியது நமது கடமை. அதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்” என்றார்.

தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களின்படி கம்போடியாவில் நீர் ஆதாரத் திட்டங்களுக்கு நிதியளிப்பது, பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவது, கம்போடிய கடற்படை கப்பல்கள் இந்திய கடற்பகுதிக்கு வந்து பயிற்சி பெறுவது, ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளித்தல், இரு நாட்டுப் படைகளின் கூட்டுப் பயிற்சி போன்ற திட்டங்கள் அடங்கும். முக்கியமாக கடற்கரையோரப் பகுதிகளின் பாதுகாப்புக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x