Published : 04 Dec 2023 06:41 PM
Last Updated : 04 Dec 2023 06:41 PM

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி

இம்பால்: மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் டெங்னோபால் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 13 பேரும் உயிரிழந்ததாக பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்புப் படை தரப்பில், “டெங்பால் மாவட்டம் சைபால் பகுதியில் உள்ள லெய்து கிராமத்தில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வந்தது. சம்பவப் பகுதியில் இருந்து 10 கிமீ தொலைவில் பாதுகாப்புப் படையினர் முகாம் ஒன்று இருந்தது.

அந்த முகாமில் இருந்து பாதுகாப்புப் படையினர் லெய்து கிராமத்துக்குச் சென்றபோது சண்டை முடிந்திருந்தது. ஆனால் அங்கு 13 சடலங்கள் இருந்தன. அவற்றின் அருகே எந்த ஆயுதங்களும் இல்லை. உயிரிழந்தவர்கள் யாரும் லெய்து பகுதியைச் சார்ந்தவர்களைப் போல் இல்லை.

அவர்கள் வேறு ஏதாவது பகுதியில் இருந்து வந்திருக்கலாம். இங்கு ஏதேனும் ஆயுதக் குழுவுடன் மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் உயிரிழந்த 13 பேரின் அடையாளத்தை காவல்துறையும், பாதுகாப்புப் படையினரும் வெளியிடவில்லை. பதற்றத்தை தணிக்க அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரின் மைத்தேயி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கலவரம் பரவி போர்க்களமாக மாறியது. 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்நிலையில், சமீப காலமாக சற்றே அமைதி திரும்பியது. இந்நிலையில் தற்போது மீண்டும் அங்கு மோதல் வெடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x