Published : 04 Dec 2023 08:09 AM
Last Updated : 04 Dec 2023 08:09 AM
தெலங்கானாவின் காமாரெட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவையும், தெலங்கானாவின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டியையும், பாஜக வேட்பாளர் வெங்கடரமணா ரெட்டி தோற்கடித்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் இது வரை நடந்த தேர்தல்களில் தோல்வியை சந்திக்காதவர். தெலங்கானா போராட்டத்தில் அவர் பல முறை தனது பதவிகளை ராஜினாமா செய்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். கஜ்வேல், சித்திப்பேட்டை ஆகிய தொகுதிகளில் சந்திரசேகர ராவ் போட்டியிடுவது வழக்கம். ஆனால், இம்முறை கஜ்வேல் மற்றும் காமாரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் சந்திரசேகர ராவ் போட்டியிட்டார்.
இதில், காமாரெட்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியும் சந்திரசேகர ராவுக்கு எதிராக களத்தில் இறங்கினார். ஆதலால் காமாரெட்டி தொகுதி அனைவராலும் கவனிக்கப்பட்டது. இங்கு பாஜக சார்பில் வெங்கடரமணா ரெட்டி போட்டியிட்டார். மூவரும் ஆரம்பம் முதலே இங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அமித் ஷா உள்ளிட்டோரும் இங்கு பிரச்சாரம் செய்தனர்.
இந்நிலையில், இங்கு நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே ஒருவருக்கொருவர் மாறி, மாறி முன்னிலை பெற்றதால் அனைவருக்கும் இத்தொகுதி மீது எதிர்பார்ப்பு பெருகியது.
ஒரு கட்டத்தில் சந்திரசேகர ராவ் முன்னிலை வகிக்கும்போது, ரேவந்த் ரெட்டி 2-ம் இடம் வகித்தார். பாஜக வேட்பாளர் 3-ம் இடம் வகித்தார். ஆனால், இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் வெங்கடரமணா ரெட்டி 5126 வாக்கு வித்தியாசத்தில் சந்திரசேகர ராவை தோற்கடித்தார்.
முதல்வராக பதவி ஏற்க உள்ள ரேவந்த் ரெட்டிக்கு 3-ம் இடம் கிடைத்தது. ஆதலால் 2 முதல்வர் வேட்பாளர்களை தோல்வி அடைய செய்தார் பாஜக வேட்பாளர் வெங்கடரமணா ரெட்டி என அத்தொகுதியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT