Published : 04 Dec 2023 06:25 AM
Last Updated : 04 Dec 2023 06:25 AM
புதுடெல்லி: மூன்று மாநில தேர்தல் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 3-வது (ஹாட்ரிக்) முறையாக வெற்றி பெறும் என்பதை உறுதி செய்வதாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கூடிய கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல்களில் இன்று பாஜகவுக்கு கிடைத்த வெற்றி முன் எப்போதும் இல்லாத மற்றும் வரலாற்று சிறப்புமிக்கது. இது, அனைவரின் வெற்றிக்காக அனைவரும் பாடுபடுவோம் மற்றும் தற்சார்பு இந்தியா ஆகிய நம்முடைய முழக்கத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் வெற்றி பெற்றுள்ளது. நேர்மையும் நல்ல நிர்வாகமும் வெற்றி பெற்றுள்ளது. ஊழலுக்கு எதிரான எங்கள் போருக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
இப்போது 3 மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 3-வது (ஹாட்ரிக்) முறையாக வெற்றி பெறும் என்பதை உறுதி செய்வதாக உள்ளது என சிலர் கூறுகின்றனர். ஊழல், திருப்திபடுத்தும் அரசியல் மற்றும் வாரிசு அரசியலை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த முடிவுகள் அமைந்துள்ளன.
உலக நாடுகள் நம்பிக்கை: இந்தியாவின் மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கைய உறுதி செய்வதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. மேலும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது இலக்குக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை உணர்த்துவதாக இது உள்ளது.
அகங்காரம் பிடித்த கூட்டணி: காங்கிரஸ் கட்சிக்கும் அவர்களுடைய அகங்காரம் பிடித்த கூட்டணிக்கும் (இண்டியா) மிகப் பெரிய பாடம் புகட்டுவதாக இந்த முடிவுகள் அமைந்துள்ளன.
ஜாதி அடிப்படையில் (ஜாதிவாரி கணக்கெடுப்பு) நாட்டை பிளவுபடுத்தபல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்னைப் பொருத்தவரை நம் நாட்டில் பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகிய 4 ஜாதிகள் மட்டுமே உள்ளன என்று கூறி வருகிறேன். இவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நம் நாடு மேலும் வலுவடையும்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் ஆட்சி செய்தவர்கள் இளைஞர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மேலும் ஊழலில் ஈடுபட்டார்கள். இதனால்தான் அம்மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தோல்வி அடைந்துள்ளன. ஊழலில் ஈடுபடும் கட்சிகள் தங்கள் வழியை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை வாக்காளர்கள் உணர்த்தி உள்ளனர்.
மக்கள் அன்பு மழை: மாறாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில மக்கள் பாஜக மீது அன்பை பொழிந்துள்ளனர். தெலங்கானாவிலும் பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தேர்தல் முடிவு குறித்து எப்போதும் கணித்ததில்லை. ஆனால் இந்த முறை என்னுடைய விதியை மீறினேன். ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராது என்று கணித்தேன். ஏனெனில் அம்மாநில மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT