Last Updated : 04 Dec, 2023 07:44 AM

 

Published : 04 Dec 2023 07:44 AM
Last Updated : 04 Dec 2023 07:44 AM

வரும் 6-ம் தேதி டெல்லியில் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க திட்டம்

புதுடெல்லி: 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 6-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. மீதம் உள்ள மிசோரம் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இவற்றின் தாக்கம் குறித்து எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசிக்க உள்ளனர். இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி வீட்டில் வரும் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு இண்டியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மட்டுமே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்காக பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரால் உருவாக்கப்பட்டது 'இண்டியா' கூட்டணி. நாடு முழுவதிலும் உள்ள சுமார் 28 எதிர்க்கட்சிகள் இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் இவர்களுடைய ஒரே நோக்கம். ஆனால், தற்போது வெளியான மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது எளிதானதல்ல எனத் தெரியவந்துள்ளது. இதிலும், தொடரும் பிரதமர் மோடியின் அலை அதற்கு பெரும் தடையாகி விட்டது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் இண்டியா கூட்டணி ஒன்றுசேர முயன்றது. இது, காங்கிரஸுக்கு பலன் தந்திருக்குமா? என்பது கேள்விக்குறியே. இதனல்தானோ, என்னவோ இண்டியா கூட்டணியின் முக்கியக் கட்சியான காங்கிரஸ் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் தங்கள் கட்சி எழுச்சி பெற்று விட்டதாகக் காங்கிரஸ் கருதியது. காங்கிரஸின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டதும் ஒரு காரணமானது. இதனால், காங்கிரஸ் 5 மாநிலங்களிலும் தனித்தே போட்டியிட்டது.

இந்த தனித்த போட்டியால், இண்டியா கூட்டணியின் உறுப்பினர்களான சமாஜ்வாதி உள்ளிட்ட சில கட்சிகள் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தின. இக்கூட்டணியின் நிறுவனரான பிஹார் முதல்வர் நிதிஷும், இண்டியாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மீது புகார் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.

ஆனால், தென்னிந்தியாவில் மட்டுமே காங்கிரலுக்கு முன்னேற்றம் இருப்பது வெளிச்சமாகி விட்டது. இந்த நிலையால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், இண்டியா கூட்டணியை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிலை உருவாகி வருகிறது. இதையடுத்து, மக்களவை தேர்தலுக்காக இண்டியா கூட்டணியைப் பலப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x