Published : 28 Jan 2018 08:05 AM
Last Updated : 28 Jan 2018 08:05 AM
எங்கள் கட்சியினரை பாஜகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்தால் நாங்கள் எங்கள் வழியை பார்த்துக் கொள்கிறோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதனால் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி முறியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த பிறகு, புதிய ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெலுங்கு தேசம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியது. தெலுங்கு தேசம்-பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
புதிய தலைநகரம் அமைத்தல், போலாவரம் அணைக்கட்டு பணிகள், மாநில சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், ஆட்சி அமைத்த பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என கை விரித்துவிட்டது மத்திய அரசு. இதற்கு பதிலாக சிறப்பு நிதி வழங்குவதாகக் கூறியது.
போலாவரம் அணைக்கட்டுக் கும் போதிய நிதி வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பல முறை பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஆகியோரை சந்தித்தார். ஆனாலும் பலன் இல்லை. இதனிடையே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் நடிகர் பவன் கல்யாண் கட்சியும் சிறப்பு அந்தஸ்து வரும் வரை போராடுவோம் என்றும் அறிவித்துள்ளன. மாநில சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்தால் வரும் 2019 பொது தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிக்குத் தயார் என ஜெகன் மோகன் ரெட்டி, அறிவித்தார்.
இதனிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்த 22 எம்எல்ஏ-க்கள் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இவர்களில் இருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கினார் நாயுடு. கட்சி மாறிய எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சரான அந்த இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஒருவர் கருத்து தெரிவித்தார். மேலும், பாஜகவைச் சேர்ந்த சிலர் தெலுங்கு தேசம் கட்சியை விமர்சித்து வருகின்றனர். இது குறித்து அக்கட்சியினர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அமராவதியில் கட்சி நிர்வாகிகளிடம் சந்திரபாபு நாயுடு நேற்று பேசும்போது, “கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். ஆனால் பாஜகவினர் தேவையின்றி எங்களை விமர்சிக்கின்றனர். இதுகுறித்து யாரும் பேச வேண்டாமென கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்கு எங்கள் கட்சியினர் மதிப்பு கொடுத்து மவுனமாக உள்ளனர். எனவே, பாஜகவினர் விமர்சனம் செய்வதை தடுத்து நிறுத்த மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநிலை நீடித்தால், நாங்கள் எங்கள் வழியை பார்த்துக் கொள்வோம்” என்றார்.
மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா, 2019 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிடப் போவதாகவும் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சால் பாஜக தெலுங்கு தேசம் கூட்டணியும் விரைவில் முறியும் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT