Published : 03 Dec 2023 06:21 PM
Last Updated : 03 Dec 2023 06:21 PM
புதுடெல்லி: சனாதன தர்மத்தை பழித்தால், அது தன் விளைவுகளைக் காட்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். 3 மாநில தேர்தல் முடிவுகளை முன்வைத்து அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள பதிவில், "சனதான தர்மத்தை பழித்தால், அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். பாஜகவின் மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் கட்சியின் கடைநிலை உறுப்பினர்களின் உழைப்புக்கு கிடைத்த மற்றொரு மகத்தான வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம் கட்சியை கலங்க வைத்துள்ளது: மூன்று வடமாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றியை பறிகொடுத்துள்ள நிலையில், அதனை சனாதன தர்மத்துடன் இணைத்து ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சனாதனத்தை (தர்மத்தை) எதிர்த்தது கட்சியை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நாடு சாதி அடிப்படையிலான அரசியலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. சனாதனத்தை எதிர்த்ததன் விளைவு இது" என்று தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்து அவர் கூறுகையில், இது காங்கிரஸ் கட்சிக்கான தோல்வி இல்லை. மாறாக, கட்சியில் உள்ள இடதுசாரிகளின் தோல்வி என்றார்.
முன்னதாக, மத்தியப் பிரதேச தேர்தலுக்கு முன்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து ஆன்மிகத் தலைவரான ஆச்சாரிய பரமோத் கிருஷ்ணம், "மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி என்னை தேர்வு செய்யவில்லை. எனக்கு வருத்தம் இல்லை. இந்துக்களை ஆதரிக்க அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். இந்து குரு ஒருவர் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரம் செய்வது சரியாக இருக்காது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது கட்சியின் முடிவு.
பகவான் ராமரை வெறுக்கக்கூடிய சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த தலைவர்கள் இந்து என்ற வார்த்தையையும் வெறுக்கிறார்கள். இந்து மத குருவை அவமதிக்க விரும்புகிறார்கள். இந்து ஆன்மிக குரு கட்சியில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. இண்டியா கூட்டணியின் முக்கிய குறிக்கோள் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும்; பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், சோகம் என்னவென்றால் அவர்கள் அளவுக்கு அதிகமாக மோடியை வெறுக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்தியாவையும் வெறுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ தெலங்கானாவில் மட்டுமே தடம் பதித்துள்ளது. முழுமையாக வாசிக்க > ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆதிக்கம்; காங்கிரஸ் வசமாகும் தெலங்கானா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT