Published : 03 Dec 2023 04:03 PM
Last Updated : 03 Dec 2023 04:03 PM
ஹைதாராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றித் தடம் பதித்துள்ள நிலையில், அங்கு போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் கட்சியை பாஜக பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே ஒரு வெற்றி என்ற இருந்த நிலையில், தற்போது 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது பாஜக.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 9-ம் தேதி அறிவித்தது. 5 மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் 30-ம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. இதன்படி, சத்தீஸ்கரில் நவ.7, 17 ஆகிய தேதிகளிலும், மிசோரமில் நவ.7, மத்திய பிரதேசத்தில் நவ.17, ராஜஸ்தானில் நவ.25, தெலங்கானாவில் நவ.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இன்று (டிச.3) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே காங்கிரஸ் ஆதிக்கம் வெளிப்பட்டது. மாலை 3.30 மணி நிலவரப்படி தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை இலக்கை கடந்து 64 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், பாஜக 7 இடங்களில் தடம் பதித்து கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், கடந்த 2018 தேர்தலில் பாஜக ஒரே ஒரு இடம் மட்டுமே பிடித்திருந்தது. இதனால், பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிப்பது தனிப்பட்ட முறையில் அந்தக் கட்சிக்கு வலுசேர்த்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது தவிர மொத்தமுள்ள 119 தொகுதிகளில் ஓரிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முன்னிலை வகிக்க, ஹைதராபாத் எம்.பி.யான அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஓரிடத்தில் முன்னிலை வகிக்கிறது. ஆந்திரா, தெலங்கானாவில் ஒவைசி நன்கு அறியப்பட்டவர். செல்வாக்கு மிக்கவராகவும் அறியப்படுகிறார். ஆனால், அவரது கட்சியைவிட பாஜக அதிக வாக்குகள் பெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஓவைசி பாஜகவின் பி டீம் என்றும் அறியப்படுகிறார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவர் மீது சமாஜ்வாதி கட்சி, சிறுபான்மையினத் தலைவர்கள் என பல தரப்பிலிருந்தும் இதே குற்றச்சாட்டு வைக்கப்ட்டது
ரேவந்த் பேரணி: தெலங்கானாவில் காங்கிரஸ் தடம் பதித்துள்ள நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஹைதராபாத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமாக ஒரு சிறு சாலை பேரணி மேற்கொண்டார். அவர் கோடங்கல் மற்றும் கம்மாரெட்டி என இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறார். கம்மாரெட்டியில் கேசிஆர் தலைவர் சந்திரசேகர ராவை பின்னுக்குத் தள்ளி கட்சி மேலிடத்தின் அபிமானத்தை அவர் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT