Published : 03 Dec 2023 10:46 AM
Last Updated : 03 Dec 2023 10:46 AM
போபால்: மத்தியப் பிரதேச வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகளைத் தாண்டி முன்னிலை பெற்றுள்ள நிலையில், மக்களின் ஆசீர்வாதத்தால் தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி நாங்கள் அமைப்போம் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்க்க > மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள்
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஆரம்ப கட்ட நிலவரப்படி, பாஜக 124 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 100 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவராஜ் சிங் சவுகான், "மக்களின் ஆசியுடனும், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையாலும் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமையும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மக்களின் நம்பிக்கை பாஜகவுடன் இருக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "முடிவுகள் முழுமையாக வரும் வரை நாங்கள் காத்திருப்போம். தனிப் பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், மக்கள் நலத் திட்டங்களுமே மக்களின் இத்தகைய ஆணைக்கு காரணம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT