Last Updated : 03 Dec, 2023 06:35 AM

 

Published : 03 Dec 2023 06:35 AM
Last Updated : 03 Dec 2023 06:35 AM

சுயேச்சைகளுக்கு காங்கிரஸ், பாஜக வலை

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இங்கு ஆளும் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சியை தொடர முயல்கிறது. இதை முறியடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்துள்ளது. இங்கு இதரகட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக, காங்கிரஸுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவியது.

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை வெளியிட்ட நிறுவனங்களில் சில மீண்டும் பாஜக ஆட்சி எனக் குறிப்பிட்டனர். இன்னும் சில, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளன. இதன் காரணமாக, கடும் போட்டியுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அங்கு சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ள வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு வலை வீசியுள்ளதாகத் தெரிகிறது.

இம்முறை நிலவிய கடும் போட்டியின் காரணமாக இரண்டு கட்சிநிர்வாகிகளும் தனது வேட்பாளர்களை மிகவும் கவனமாகத் தேர்வுசெய்தனர். இதில், பல முக்கியதலைவர்களுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, அவர்களில் பலர் தாம் முன்பு வென்ற தொகுதிகளில் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

இவர்களுக்கும் வாக்காளர் களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்ததாகக் கருதப்படுகிறது. இவர்களில் சிலருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அஞ்சுகின்றன.

இதனால், இந்த இரண்டு கட்சிகளும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதற்கு தனி மெஜாரிட்டி பெறுவதற்கு ஒருசிலதொகுதிகள் குறைந்து விடக்கூடாது என்பதே காரணமாகி விட்டது. கடந்த 2018 தேர்தலிலும் ம.பி.யில் 4 சுயேச்சைகள் 5.48 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றனர். இதர கட்சிகளில் பகுஜன் சமாஜுக்கு 1 , சமாஜ்வாதிக்கு 2 தொகுதிகளும் கிடைத்திருந்தன.

மெஜாரிட்டிக்குத் தேவை யான116 இடங்களில் காங்கிர ஸுக்கு 2 குறைவாக 114 இடங்கள் கிடைத்திருந்தன. பிறகு சுயேச்சை மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸின் முதல்வராக கமல்நாத் ஆட்சி அமைத்தார்.

எனினும், சில மாதங்களில் அதன் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தனர். பிறகு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களால், ஆட்சி அமைத்த பாஜகவுடன் சுயேச்சைகளும் இணைந்து விட்டனர்.

எனவேதான், தற்போது வெற்றி வாய்ப்புள்ள சுயேச்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முயன்று வருவதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x