Published : 03 Dec 2023 06:58 AM
Last Updated : 03 Dec 2023 06:58 AM
பெங்களூரு: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் தேர்தல்முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிதாவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் சொகுசு விடுதிகளை தயார் நிலையில் வைத்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மிசோரம் மாநிலத்தில் போராட்டம் நடைபெறுவதால் வாக்கு எண்ணிக்கை நாளைநடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் கடும்போட்டிஇருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக தகவல் வெளியானதால் காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை தெலங்கானாவுக்கு செல்லுமாறு அக்கட்சியின் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதே போலதேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுப்பதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்க வைக்க பெங்களூருவின் புறநகர் பகுதிகளில் சொகுசு விடுதிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகின.
இதுதொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், எங்களுக்கு தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. கர்நாடகாவில் நிகழ்ந்ததைப் போல பெரிய மாற்றம் நிகழும் என நம்புகிறேன். எங்களது மேலிடத் தலைவர்களும் சம்பந்தப்பட்ட மாநிலத் தலைவர்களும் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். எங்களது எம்எல்ஏக்களை சிலர் விலைக்கு வாங்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்களிடம் ஆபரேஷன்தாமரை வெற்றி பெறாது. தெலங்கானா மாநிலத்தில் இந்த முறை மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்''என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி வந்த போதும் டிகே சிவக்குமார் கட்சிக்கு பக்கபலமாக இருந்துள்ளார் என்று கர்நாடக காங்கிரஸார் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT