Published : 02 Dec 2023 05:33 PM
Last Updated : 02 Dec 2023 05:33 PM
ஜெய்ப்பூர்: “ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்று முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கும் தியா குமாரி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளை அடுத்து மாநில பாஜகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது. தேர்தலின்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாவிட்டாலும், பாஜகவின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளராக தியா குமாரி கருதப்படுகிறார்.
இந்நிலையில், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்தும், பாஜக வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்பதும் குறித்தும் தியா குமாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில்: ''சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கும். முழு பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இரட்டை இன்ஜின் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்.
தேர்தலுக்கு முன் வாக்காளர்கள் பலரது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து காங்கிரஸ் அரசு நீக்கிவிட்டது. எனது தொகுதியில்கூட 18 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து நான் புகார் அளித்துள்ளேன். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். பாஜக வெற்றி பெற்றால் யார் முதல்வர் என கேட்கிறீர்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் உயர்மட்டக் குழுவும், முக்கிய தலைவர்களும் இது குறித்து முடிவெடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, கட்சி என்ன வேலையை கொடுத்ததோ நான் அவற்றை எப்போதுமே நிறைவேற்றி வந்திருக்கிறேன்'' என்று தியா குமாரி தெரிவித்துள்ளார்.
தியா குமாரி பின்னணி: ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த இரண்டாம் மான் சிங்கின் மகன் பவானி சிங்கின் ஒரே மகள் தியா குமாரி. டெல்லி, மும்பை, ஜெய்ப்பூரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், லண்டனில் உள்ள செல்சியா கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள அமிதி பல்கலைக்கழகத்தில் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 2013-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தியா குமாரி, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு ராஜ்சமந்த் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தியா குமாரி வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்ற தேர்தலில் வித்யாதார் நகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT