Published : 02 Dec 2023 05:01 PM
Last Updated : 02 Dec 2023 05:01 PM

“முதல்வர் போட்டியில் நான் இல்லை. ஆனால்...” - ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர்

ஜெய்ப்பூர்: "ராஜஸ்தானில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி, முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை" என்று அம்மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சி.பி.ஜோஷி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ராஜஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். யார் முதல்வர் என்ற போட்டியில் நான் இல்லை. ஆனால், மாநிலத்தின் முதல்வராகும் நபருக்கு மாலை அணிவிக்கும் ஆளாக நான் இருப்பேன்" என்றார்.

மேலும், முக்கியத் தொலைக்காட்சிகள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கருத்துக் கணிப்பு வெளியான பின்னர் பேசிய ஜோஷி, "மாநிலத்தில் பாஜக 135-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸுக்கு 50-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும்” என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அசோக் கெலாட் தலைமையிலான அரசின் பதவி காலம் நிறைவடைகிறது. புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. அதன் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி (நாளை) வெளியாகின்றன. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 5 கருத்துக் கணிப்பு முடிவுகளில் மூன்று முடிவுகள் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், இரண்டு முடிவுகள் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. என்றாலும், மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களின் வாக்குகள் நாளை (டிச.3) அன்று எண்ணப்படுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடந்திருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் பல்வேறு வகைகளில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x