Published : 02 Dec 2023 03:36 PM
Last Updated : 02 Dec 2023 03:36 PM
அயோத்தி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகிவிடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், அங்கு தற்போது பெரிய அளவில் விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டைப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை முடிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், விமான விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து யோகி ஆதித்யாநாத்துக்கு ஜோதிராதித்ய சிந்தியா விளக்கினார். மேலும், பணிகள் நிறைவுற்றதும் விமான நிலையம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த வரைபடத்தையும், யோகி ஆதித்யாநாத்துக்கு காட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, ''நாட்டின் பிற பகுதிகளில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ அயோத்தி வருபவர்கள் நகரின் புராதன சிறப்பை விமான நிலையத்திலேயே அறிந்து கொள்வார்கள். அதற்கேற்ப, விமான நிலையத்தை வடிவமைக்க நாங்கள் முயன்று வருகிறோம்'' என கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யாநாத், ''அயோத்தியில் மிகச் சிறிய அளவில் விமான நிலையம் இருந்தது அனைவருக்கும் தெரியும். விமான நிலையத்தை பெரிய அளவில் அமைப்பதற்காக மாநில அரசு 821 ஏக்கர் நிலத்தைக் கொடுத்ததை அடுத்து, மிகப் பெரிய புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கானப் பணிகளை இந்திய விமான ஆணையரகம் மேற்கொண்டு வருகிறது. புதிய விமான நிலையம் வரும் 15-ம் தேதிக்குள் தயாராகிவிடும்'' என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT