Published : 02 Dec 2023 03:13 PM
Last Updated : 02 Dec 2023 03:13 PM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்காக அனைத்துக் கட்சி கூட்டம் - 23 கட்சிகள் பங்கேற்பு

அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் கூடவுள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில் கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 23 கட்சிகளைச் சேர்ந்த 30 தலைவர்கள் கலந்து கொண்டதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 15 அமர்வுகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முதல்நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். ஆனால், நாளை 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் ஒரு நாள் முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. வருகிற நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டோர்

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரமோத் திவாரி, "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது. சில கருத்துக் கணிப்புகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. ஆனால், நாங்கள் எங்கள் தொண்டர்கள் மூலம் கருத்துக்களைக் கேட்டுள்ளோம். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். மிசோரத்தில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார்.

இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஐபிசி, சிஆர்பிசி, ஆவணச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய மூன்று சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற வழக்கில் சிக்கி உள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அப்படி ஒரு முடிவு எடுக்கப்படக் கூடாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரமோத் திவாரி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை, எந்த ஒரு குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் தகுதி நீக்கம் செய்யப்படக் கூடாது. இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x