Published : 02 Dec 2023 03:23 PM
Last Updated : 02 Dec 2023 03:23 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் பணம் பெற்றதாகக் கூறிய குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ராஜன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.
நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் ஆதிர் ராஜன் கூறியிருப்பதாவது: “நெறிமுறைக் குழு மற்றும் சிறப்புரிமை குழு ஆகியவை திட்டமிடப்பட்டப் பணிகள் குறித்தும், குறிப்பாக தண்டனை தரும் விவகாரங்களில் இக்குழுக்களின் அதிகாரம் பற்றிய தெளிவான வரையறைகள் எதுவும் இல்லை. மேலும், விதி 316-பி கீழ் நெறிமுறைகள் கூறப்பட்டிருந்தாலும், நெறிமுறையற்ற நடத்தை மற்றும் நடத்தை நெறிமுறைகள் குறித்த தெளிவான வரையறைகள் எதுவும் இல்லை. அவை உருவாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில், குழுவின் நடைமுறைகள் உட்பட அவை அரசியலில் பெரிய செல்வாக்கையும் தாக்கத்தையும் செலுத்தலாம். எனவே, அவற்றில் சபாநாயகரின் வழிகாட்டுதலின் கீழ் ஆழ்ந்த கவனம் தேவைப்படலாம்" என்று கூறியுள்ளார்.
இத்துடன் இந்தக் கருத்துகள் எல்லாம் தனது தனிப்பட்டவையே என்று பொது கணக்கு குழுவின் தலைவராக இருக்கும் ஆதிர் ராஜன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதனிடையே, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு பணம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற மக்களவை நெறிமுறைக் குழுவின் பரிந்துரை திங்கள்கிழமை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மக்களவைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், மக்களவை நெறிமுறைக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் வினோத் குமார் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடா்பாக விசாரணை நடத்த பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறை குழுவுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டார்.
மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவ.9 ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 6-4 என்ற கணக்கில் பரிந்துரை நிறைவேறியது. காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தார். மற்ற நான்கு எதிர்க்கட்சி எம்பி.,க்கள் மறுப்புக் குறிப்புகளை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT