Published : 30 Nov 2023 07:49 PM
Last Updated : 30 Nov 2023 07:49 PM

தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ‘டீப்ஃபேக்’ பயன்படுத்தியதாக பிஆர்எஸ் கட்சி புகார்

கேசிஆர்

ஹைதராபாத்: தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் பிஆர்எஸ் கட்சி புகார் கொடுத்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. “இங்கு காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை குறிவைத்து டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. அவர்களை உண்மைக்குப் புறம்பாக சித்தரிக்க முயன்றுள்ளது” என தேர்தல் ஆணையத்தில் பிஆர்எஸ் கட்சி புகார் கொடுத்துள்ளது. அதில் கே.சி.ஆர், கே.டி.ராமராவ், அமைச்சர் ஹரிஷ் ராவ், எம்.எல்.சி கே.கவிதா மற்றும் பிஆர்எஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதோடு, வீடியோ மற்றும் ஆடியோக்களை உருவாக்கி பரப்பியதற்கான நம்பகத்தன்மையுடைய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கவிதா தனது எக்ஸ் தளத்தில், "அன்புக்குரிய வாக்காளர்களே விழிப்புடன் இருங்கள். நம்பிக்கையற்ற கட்சிகள் பொய்யான செய்திகளைப் பரப்புகின்றனர். உங்களுடைய முடிவை பொய்யான செய்திகள் மாற்ற அனுமதிக்காதீர்கள். ஒன்றை நம்புவதற்கும் பகிர்வதற்கும் முன்பு அதன் உண்மைத்தனமையை ஆராய்ந்து பாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சி எதிரொலியாக சமீபகாலமாக டிஜிட்டல் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் முகத்தை வைத்து கற்பனையில் பல ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x