Published : 30 Nov 2023 07:32 AM
Last Updated : 30 Nov 2023 07:32 AM
புதுடெல்லி: பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்த செய்தியில் கூறியிருப்பதாவது:
அரசின் முன்னணி திட்டங்கள் அதன் பயனாளிகளுக்கு குறித்த நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்து, அவற்றை செறிவூட்டுவதற்காக ‘விக்ஷித் பாரத் சங்கல்ப்யாத்ரா’ (வளர்ந்த இந்தியா தீர்மான யாத்திரை) நிகழ்ச்சி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்ய, பிரதமர் மோடி எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரதமரின் பெண் விவசாயி ட்ரோன் மையத்தை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் சுயஉதவிக் குழு பெண்களுக்கு டரோன்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் சுய உதவிக்குழு பெண்களுக்கு 15 ஆயிரம் ட்ரோன்கள் வழங்கப்படும். இதன் மூலம் விவசாய பணிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இந்த ட்ரோன் பயிற்சி சுய உதவிக் குழு பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்.
பிரதமரின் சுகாதாரமான இந்தியா தொலை நோக்குக்காக, மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் கிடைக்க பிரதமர் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் மருந்தக திட்டம் மூலம், குறைந்த விலையில் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000-மாவது மக்கள் மருந்தகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மக்கள் மருந்தகத்தின் எண்ணிக்கையை 10,000-லிருந்து 25,000-மாக அதிகரிக்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் பிரதமர் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT