Published : 30 Nov 2023 07:08 AM
Last Updated : 30 Nov 2023 07:08 AM
கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது பேரணியில் அவர் பேசியதாவது:
இந்த பிரம்மாண்ட பேரணியில் அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களின் மனநிலையை குறிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தை சீரழித்து விட்டார். வரவிருக்கும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இங்கு ஆட்சிக்கு வரும். அதற்கு முன்னதாக 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறுவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது நாட்டின் சட்டம். இந்தச் சட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அந்தச் சட்டம் அமலாவதை யாராலும் தடுக்க முடியாது.
பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், மத்திய அரசு இதுவரை அதற்கான விதிகளை வகுக்கவில்லை. இதனால் சட்டம் இழுபறியில் உள்ளது. மம்தா அரசாங்கத்தை தூக்கி எறிந்து விட்டு, மக்கள் பாஜகவைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உ.பி. எம்.பி அஜய் மிஸ்ரா, குடி யுரிமை திருத்தச் சட்டத்துக்கான (சிஏஏ) விதிகள் மார்ச் 30, 2024-க்குள் மத்திய அரசால் வகுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT