Published : 30 Nov 2023 05:13 AM
Last Updated : 30 Nov 2023 05:13 AM
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வாக்குறுதி அளித்தபடி கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோயிலுக்கு செல்ல உள்ளேன் என சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்டில் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 12-ம் தேதி திடீரென மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதற்காக, சர்வதேச சுரங்க நிபுணரும் ஆஸ்திரேலிய பேராசியருமான அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கேயே தங்கியிருந்து மீட்புக் குழுவுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கினார். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே, மீட்புப் பணி நடைபெற்றபோது, அந்த சுரங்க நுழைவாயிலுக்கு அருகே உள்ள பாபா போக்நாக் கோயிலில் அர்னால்டு டிக் பிரார்த்தனை செய்தார். அப்போது தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அனைவரது இதயத்தையும் கவர்ந்தது.
இதுகுறித்து அர்னால்ட் டிக்ஸ் நேற்று கூறியதாவது: மீட்புப் பணியின் தொடக்கத்தில், இந்த சுரங்கத்தில் சிக்கியவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என கூறியிருந்தேன். அவர்களுக்கு கிறிஸ்துமஸ் முன்கூட்டியே வந்துவிட்டது.
நாங்கள் அமைதியாக இருந்தோம், எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். பொறியாளர்கள், ராணுவம், அனைத்து முகமைகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நாங்கள் ஒரு அற்புதமான குழுவாக வேலை செய்தோம்.
தொழிலாளர்களை பத்திரமாக மீட்டது அதிசயமாக இருந்தது. இந்த வெற்றிகரமான பணியின் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இக்கட்டான மீட்புப் பணியின்போது நான் வாக்களித்தபடி, கடவுளுக்கு நன்றி சொல்வதற்காக நான் மீண்டும் கோயிலுக்கு செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
25 நாட்களுக்கு தேவையான உணவு
மீட்கப்பட்ட தொழிலாளி அகிலேஷ் சிங் கூறும்போது, “சுரங்கத்தில் சிக்கிய 18 மணி நேரம் வரையில் உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. எங்களுக்கு அளித்த பயிற்சியின்படி, சிக்கியவுடன் தண்ணீர் குழாயை திறந்தோம். அதில் தண்ணீர் விழத் தொடங்கியதும் நாங்கள் சிக்கிக் கொண்டதை வெளியில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அதன் பிறகு அந்த குழாய் மூலம் எங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பத் தொடங்கினர்.
பின்னர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு நடுவே ஒரு இரும்புக் குழாயை செருகினர். அதில் நாள் முழுவதும் உணவுப் பொருட்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர். இன்னும் 25 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அங்கு உள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment