Published : 30 Nov 2023 04:30 AM
Last Updated : 30 Nov 2023 04:30 AM
புதுடெல்லி/ டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் மருத்துவ பரிசோதனைக்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பிரதமர் மோடியிடம் அவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா அருகே சுரங்கப் பாதையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கடந்த 12-ம் தேதி சுரங்கத்துக்குள் சிக்கினர். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணிகளை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பிறகு, 41 பேரும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
சினூக் ஹெலிகாப்டரில்.. இந்நிலையில், அனைத்து தொழிலாளர்களும் ராணுவத்துக்கு சொந்தமான சினூக் ரக ஹெலிகாப்டர் மூலம் நேற்று ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. சிகிச்சை தேவைப்படாதவர்களும் ஓரிரு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தொழிலாளர்களிடம் பேசினார். அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
நெகிழ்ச்சியுடன் நன்றி: மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் பிரதமர் மோடியிடம் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவர் பிரதமரிடம் கூறும்போது, ‘‘எங்களை மீட்க உதவிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உள்ளே சிக்கி இருந்தபோது, நாங்கள் ஒருபோதும் பயப்படவோ, நம்பிக்கை இழக்கவோ இல்லை. 41 பேரும் ஒன்றாகவே இருந்தோம். எங்களது இரவு சாப்பாட்டை ஒன்றாகவே சாப்பிட்டோம். இந்த 17 நாட்களும் எங்களுக்கு ஆதரவு அளித்த உத்தராகண்ட் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சுரங்கப் பாதைக்கு வெளியிலேயே நின்று, எங்களுக்கு ஆதரவாக இருந்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் உட்பட எங்களை பத்திரமாக வெளியே கொண்டுவந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
25 நாளுக்கு தேவையான உணவு: இதற்கிடையே, சுரங்கப் பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்தபோது கிடைத்த அனுபவத்தை தொழிலாளர்கள் கூறிவருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலாளி அகிலேஷ் சிங் கூறியதாவது:
சுரங்கத்தில் சிக்கிய 18 மணிநேரம் வரை வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்கு பயிற்சி அளித்தபடி, உள்ளே சிக்கிய உடனே தண்ணீர் குழாயை திறந்தோம். அதில் தண்ணீர் விழத் தொடங்கியதும், நாங்கள் உள்ளே சிக்கி இருக்கிறோம் என்பதை வெளியில் இருந்தவர்கள் புரிந்து கொண்டனர். அதன்பிறகு, அந்தகுழாய் மூலமாகவே எங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பத் தொடங்கினர். பின்னர், இடிபாடுகளுக்கு நடுவே ஒரு இரும்புக் குழாயை மீட்பு குழுவினர் நுழைத்தனர். அதில்நாள் முழுக்க உணவுப் பொருட்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர். இன்னும் 25 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அங்கு உள்ளன’’ என்றார்.
‘கடைசி ஆளாக வருகிறேன்’: தொடக்கத்தில், உள்ளே சிக்கிதொழிலாளர்கள் பதற்றமடைந்த நேரத்தில், மூத்த தொழிலாளரான கப்பார் சிங் என்பவர்தான் அவர்களுக்கு நம்பிக்கைகொடுத்துள்ளார். தொழிலாளர்களுக்கு யோகா, தியானம் சொல்லிக் கொடுத்து, அவர்களை மனஉறுதியுடன் இருக்க உதவி செய்துள்ளார்.
‘‘நாம் அனைவரும் பத்திரமாக இருக்கிறோம். நிச்சயம் மீட்கப்படுவோம். நீங்கள் அனைவரும் மீட்கப்பட்ட பிறகு, கடைசியாக மீட்கப்படுபவன் நானாகத்தான் இருப்பேன்’’ என்றும் சக தொழிலாளர்களிடம் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். பத்திரமாக வெளியே வந்த பிறகு, கண்ணீர் மல்க அவருக்கு தொழிலாளர்கள் நன்றி கூறினர்.
இதுகுறித்து அவரது சகோதரர் ஜெயமல் சிங் நேகி கூறியதாவது:
நான் எனது அண்ணன் கப்பாருடன் தினமும் பேசினேன். முதலில் அங்கிருந்த குழாய் வழியாக பேசினோம். அதன் பின்னர் எங்களுக்கு தொலைபேசி வசதி செய்துதந்து அதில் பேசுமாறு கூறினர்.
‘உங்களை மீட்க வெளியே எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. உறுதியுடன் இருங்கள்.அங்கு யோகா, தியானம் செய்யுங்கள்’ என்று அண்ணனிடம் கூறினேன். அதற்கு அவர், ‘‘ஆமாம். நாங்கள் அனைவரும் இங்கு யோகாசெய்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
இதுபோல ஏற்கெனவே 3 முறைநிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட அனுபவம் கப்பாருக்கு உள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதில், நான், எங்கள் குடும்பம் மட்டுமின்றி, இந்த நாடே மகிழ்ச்சி அடைந்துள்ளது. எங்களுக்காக நாட்டு மக்கள் அனைவருமே பிரார்த்தனை செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT