Published : 29 Nov 2023 06:57 PM
Last Updated : 29 Nov 2023 06:57 PM
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது.
மேற்கு வங்க அரசைக் கண்டித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கொல்கத்தாவில் இன்று பெரும் போராட்டத்தை பாஜக நடத்தியது. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மேற்கு வங்கத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு பழிவாங்குவதாகவும், நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பதாகை ஏந்தியவாறு முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி இதில் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் கட்சியின் எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் கைலாஷ் மிஸ்ரா, "நாட்டில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் பொருளாதார நிலையைச் சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு 51 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்களில், மத்திய அரசு எவ்வாறு மேற்கு வங்கத்துக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT