Published : 29 Nov 2023 07:00 PM
Last Updated : 29 Nov 2023 07:00 PM
டேராடூன்: பெரும் போராட்டத்துக்குப் பின் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர். பெரும் சவாலுக்குப் பிறகு மீட்கப்பட்டிருக்கும் தொழிலாளர் ஒருவர் தனது அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
மனிதர்களின் வாழக்கை முறை அவர்களின் பொருளாதார ரீதியாக வேறுபடுகிறது என்றாலும், நல்ல உணவு, உடை இருப்பிடம் ஆகியவை எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சில்க்யாரா சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது, சுரங்கம் இடிந்து விபத்துக்கு உள்ளாகும் என்பதை நிச்சயம் யோசித்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது 17 நாட்களுக்கு பிறகு வாழ்வா சாவா என்ற பெரும் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். சுரங்கத்துக்குள் சிக்கியிருந்தபோது சில தினங்களுக்கு 41 தொழிலாளர்களும் என்ன உணவு உட்கொண்டார்கள், எந்த நீரை அருந்தினார்கள், எந்த காற்றை சுவாசித்தார்கள் என்பது பெரும் கேள்வியாகவே நீடிக்கிறது.
இந்த நிலையில், நம்பிக்கையுடன் தாக்குப்பிடித்த அனில் பேடியா என்ற தொழிலாளரின் அனுபவப் பகிர்வு: “பலத்த சத்தங்கள் காற்றைத் துளைத்தன. நாங்கள் அனைவரும் சுரங்கப் பாதைக்குள் புதைக்கப்படுவோம் என்றுதான் நினைத்தோம். முதல் இரண்டு நாட்களிலே எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். முதல் 10 நாட்கள் நாங்கள் எங்களுடைய தாகத்தைத் தணிக்க பாறைகளிலிருந்து சொட்டும் தண்ணீரை குடித்தும், அரிசிப் பொரியை 'muri' (puffed rice) சாப்பிட்டும் உயிர் பிழைத்தோம். இது பயங்கரமான சோகம். ஏறக்குறைய 70 மணி நேரத்துக்குப் பிறகுதான் அதிகாரிகளின் தொடர்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது, அந்த தொடர்புதான் நாங்கள் உயிர் வாழ்வதற்கான முதல் நம்பிக்கையை கொடுத்தது.
மேற்பார்வையாளர்கள் இருவர், பாறைகளின் வழியே சொட்டும் தண்ணீரைக் குடிக்கச் சொன்னார்கள். நாங்களும் அதையே செய்தோம். எங்களுக்கும் மனதில் ஏதோ ஒரு விரக்தி ஏற்பட்டது. இறுதியாக, வெளியிலிருந்து எங்களுடன் தொடர்புகொள்பவர்களின் குரல்களைக் கேட்டபோதுதான், உறுதியான நம்பிக்கையும், உயிர் வாழ்வதற்கான நம்பிக்கையும் எங்களுக்கு வந்தது. 10 நாட்களுக்கு பிறகுதான் வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள், சாதம், சப்பாத்தி போன்ற சூடான உணவுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகுதான் எங்களுடைய வாழ்க்கை வழக்கமானதாக மாறியது. நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, தீவிரமாக பிரார்த்தனை செய்தோம். இறுதியாக கடவுளும் எங்களுக்குச் செவிசாய்த்தார்” என்றார் கண்ணீருடன்.
#WATCH | Shravasti, UP | "We celebrated Diwali soon after we received a call that my husband had been safely rescued. My father has gone to Uttarakhand to bring back my husband," says Bhoomika Chaudhary, wife of Ankit Kumar who was rescued from Uttarakhand's Silkyara tunnel. pic.twitter.com/3bhS1Z9rlJ
— ANI (@ANI) November 29, 2023
தமிழக நிபுணர்களால் திருப்புமுனை: சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனம் ஈடுபட்டது. கடந்த 21-ம் தேதி இந்த நிறுவனத்தின் நிபுணர்கள், பிஆர்டி-ஜிடி5 என்ற இயந்திரம் மூலம் மண் குவியலில் துளையிட்டு, 6 அங்குலம் விட்டம் கொண்ட குழாயை தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை செலுத்தினர்.
மீட்பு பணியில் இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை மிகச் சிறிய குழாய் வழியாக உலர் பழங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தமிழக நிபுணர்கள் பொருத்திய குழாய் வழியாக, சமைத்த உணவுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) நவீனகேமராவும் குழாய் மூலம் செலுத்தப்பட்டு, தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது கண்காணிக்கப்பட்டது. மீட்பு பணியில் தாமதம் இருந்துவந்த நிலையில், தமிழக நிபுணர்கள் அமைத்த குழாய் மூலமாகவே தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப்பட்டதாக மீட்பு பணி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...