Published : 29 Nov 2023 04:01 PM
Last Updated : 29 Nov 2023 04:01 PM

உத்தராகண்ட் | 41 தொழிலாளர்களுக்கும் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை

ரிஷிகேஷ்: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுவதோடு தேவைப்படும் சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் 17 நாட்களாக நடைபெற்ற தொடர் மீட்புப் பணிகளுக்குப் பிறகு நேற்று இரவு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து, அனைவரும் அருகில் உள்ள சின்யாலிசார் சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ மையத்துக்கு இன்று காலை வருகை தந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "ஒவ்வொருவரையும் அவர்களின் பெட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய புஷ்கர் சிங் தாமி, 41 பேரின் உடல் நலமும் பரிசோதிக்கப்பட்டது. அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க, அவர்கள் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சின்யாலிசாரில் இருந்து 41 தொழிலாளர்களும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சினூக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர்களுக்கு உயர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் நிர்வாகி மருத்துவர் நரேந்திர குமார், "41 தொழிலாளர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு உடல் ரீதியாக எந்த காயமும் இல்லை. மன அழுத்தமும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தபோதும், மனநல மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் குழு அவர்களை பரிசோதிக்க உள்ளது.

ரத்தப் பரிசோதனை, இதய பரிசோதனை உள்ளிட்ட பிரசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதனையடுத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறதா இல்லை அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். எப்போது அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்பதை தற்போதே சொல்ல முடியாது. பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அது முடிவு செய்யப்படும். எதுவாக இருந்தாலும், அவர்கள் இங்கு 24 மணி நேரம் இருப்பார்கள்" எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x