Published : 29 Nov 2023 03:16 PM
Last Updated : 29 Nov 2023 03:16 PM

41 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: நேரில் நலம் விசாரித்து வழங்கிய உத்தராகண்ட் முதல்வர்

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

உத்தரகாசி: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப் பணிகளுக்குப் பிறகு நேற்று (நவ.28) இரவு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து, அனைவரும் அருகில் உள்ள சின்யாலிசார் சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ மையத்துக்கு இன்று காலை வருகை தந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் சென்று நலம் விசாரித்தார். அப்போது, அவர்களின் மன உறுதியை பாராட்டும் விதமாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஷ்கர் சிங் தாமி, "மிகவும் சவால் நிறைந்ததாக மீட்புப் பணி இருந்தது. மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒருநாள் கூட தவறாமல், பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். மீட்புப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட சின்ன சின்ன விஷயத்தையும் கேட்டறிந்தார்.

அதோடு, அவர் தனது ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், உள்ளே சிக்கி இருப்பவர்களின் மனநலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு எவ்வாறு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். 41 பேரின் உடல் நலமும் பரிசோதிக்கப்பட்டது. அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். 41 பேரின் உடல் நலனில் ஒரு தந்தையைப் போல் பிரதமர் மோடி மிக கவனமாக இருந்தார். ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்பதில் பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மிக முக்கியக் காரணமாக இருந்தது.

41 பேரின் துணிச்சலைப் பாராட்டும் விதமாக ஒவ்வொருவருக்கும் சிறிய தொகையை அரசு வழங்கி இருக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க, இவர்கள் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

41 பேரின் உறவினர்களையும் சந்தித்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "41 பேரும் எனது சகோதரர்கள். உண்மையில் இந்த நாள் ஒரு நல்ல நாள். மிகப் பெரிய மகிழ்ச்சியை இந்த நாள் அளித்துள்ளது. 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்" எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x